

தமிழகத்துக்கு சேரவேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க மறுத்தால் வழங்க வைக்க நடவடிக்கை எடுக்கப் படும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஓசூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய, உரிமையுள்ள தண்ணீரைத் தான் கேட்கிறோம். அதை வழங்க வேண்டியது கர்நாடக அரசின் கடமை. மாநில அரசியல் சூழ்நிலைகளை காரணம் காட்டி கர்நாடக அரசு காவிரி நீரை வழங்க மறுத்து வருவதாகத் தெரிகிறது. அப்படி வழங்கவில்லை எனில் நம் மாநிலத்துக்கு பாத்தியப் பட்ட தண்ணீரை வழங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குளச்சல் துறைமுகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியா சுதந்திரம் அடையும் முன்பிருந்தே உள்ளது. இதுவரை குளச்சல் துறைமுகம் மாநில அரசு கட்டுப்பாட்டில் இருந்தது. மத்திய அரசு குளச்சல் துறைமுகத்தை நிர்வகிக்க முன்வந்ததை ஒட்டி மாநில அரசு அதற்கு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
விரைவில் அங்கே துறைமுகம் அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இப்படி அமைக்கப்படும் குளச்சல் துறைமுகம் இந்தியாவின் தென்பகுதி நுழைவு வாயிலாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.