Last Updated : 23 Jun, 2020 06:37 PM

 

Published : 23 Jun 2020 06:37 PM
Last Updated : 23 Jun 2020 06:37 PM

சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவி உள்ளதா? இல்லையா? - மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்; நாராயணசாமி

சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவி உள்ளதா? இல்லையா? என மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலிறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று (ஜூன் 23) செய்தியாளர்களிடம் கூறும்போது, "புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வரும் 2 ஆம் தேதி வரை கடைகள், வியாபார நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதனை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.

டீ கடைகளில் கூட்டமாக நின்று கொண்டு டீ குடிப்பதாக எங்களுக்குத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அவ்வாறு விதிமுறைகளை கடைப்பிடிக்காத டீ கடைகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று வீடியோ பதிவு செய்து, சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், கடைகளிலும் தனிமனித இடைவெளி கடைப்பிடிப்பதில்லை, முகக்கவசம் அணிவதில்லை என்ற புகார்கள் வருகின்றன. அவ்வாறு இருந்தால் அந்த கடையின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளுக்கும் சீல் வைக்கப்படும்.

இன்று சோனியா காந்தி தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எனக்கு பேச வாய்ப்பு கிடைத்தது. அதில் பிரதமருக்கு 17 முறை நான் கடிதம் எழுதியுள்ளேன், மாநிலத்துக்கு தேவையான நிதியை கொடுக்க வேண்டும், ஜிஎஸ்டி இழப்பு தொகையை கொடுக்க வேண்டும், மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் கடைகள், தொழிற்சாலைகள் மூடப்பட்ட காரணத்தால் புதுச்சேரி மாநிலத்துக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும், கரோனா தொற்றை தடுத்து நிறுத்த அரசுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், வெண்டிலேட்டர் உள்ளிட்டவை வாங்க மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தோம்.

அதற்கு பிரதமரும், நிதியமைச்சரும் இதுவரை பதில் சொல்லவில்லை. ஆனால், அதற்கு மாறாக மத்திய அரசு, மாநிலங்களுக்கு நிதி ஆதாரத்தைக் கொடுக்காமல் விலைவாசியை உயர்த்துகின்றனர்.

இப்போது பெட்ரோல், டீசல் விலையை தினமும் உயர்த்துகின்றனர். இது மக்களுக்கு மிகப்பெரிய சுமையை ஏற்படுத்துகிறது. தினமும் உயர்த்தப்படும் பெட்ரோல், டீசல் விலையை எதிர்த்து மத்திய அரசுக்கு நாம் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். கச்சா எண்ணெய் விலை உலகளவில் ஒரு பேரலுக்கு 30 டாலடர் விற்கும் நேரத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86-ம், டீசல் ரூ.76-ம் என விற்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சோனியா காந்தியும் மத்திய அரசுக்கு 6 ஆண்டுகளில் ரூ.18 லட்சம் கோடி பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் கிடைத்துள்ளது. அந்த பணத்தை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதுபற்றி மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. அதேபோல், பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும், விலையை ஏற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுத உள்ளேன்.

இப்போது, படிப்படியாக தளர்வுகளை கொண்டுவந்தாலும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நிவாரணம் கொடுக்க மத்திய அரசு நிதி கொடுக்க வேண்டும். இன்னும் 3 மாதங்களுக்கு மத்திய அரசு இலவச அரிசி திட்டத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளோம். சீன எல்லையைப் பற்றி மிகப்பெரிய சர்ச்சை எழுந்துள்ளது.

லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீன ராணுவத்தினரை தடுத்து நிறுத்த போராடிய 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 40 பேர் காயமடைந்துள்ளனர். 10 பேரை காணவில்லை. ஆனால், பிரதமர் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி பேசும்போது, சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை என்று கூறியுள்ளார்.

இதுபற்றி ராகுல் காந்தி கூட கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு மத்திய அரசிடம் இருந்தோ, பிரதமரிடம் இருந்தோ எந்த பதிலும் வரவில்லை. இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியதால் தான் நம்முடைய ராணுவ வீரர்கள் எதிர்த்து போராடி உயிரிழந்துள்ளனர். தற்போது நேபாள அரசானது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் சீனா ஊடுருவி தங்களுடைய எல்லைக் கோட்டை புதிதாக அமைக்கின்றனர் என்று அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.

ராகுல் காந்தியும் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவி உள்ளது, அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், பிரதமரோ சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை என்று கூறியுள்ளார். அது நமக்கெல்லாம் மிகப்பெரிய வருத்தத்தைத் தருகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூட இந்திய எல்லையின் ஒரு 'இன்ச்'-ஐக் கூட நாம் சீன ராணுவத்துக்கு விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

பிரதமரின் தவறான வெளியுறவுக் கொள்கையால் நாம் சீன ராணுவத்திடம் நம்முடைய எல்லையை இழந்துள்ளோம். ஆகவே மத்திய அரசானது சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவி உள்ளதா? இல்லையா? என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்" என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x