

கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை, மகன் உயிரிழப்புக்கு சாத்தான்குளம் காவலர்களே காரணம் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (ஜூன் 23) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா நோய் தொற்று தடுப்பு நெருக்கடி காலத்தில் காவல்துறையின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், 'மக்களின் நண்பன் - காவலர்' என்ற விளம்பரப் பதாகையின் கீழ் பணிபுரியும் காவலர்களில் சிலர் அதனை உணர்ந்து செயல்படுவதில்லை என்பது வேதனையிலும் வேதனையாகும்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் நகரில் ஜெ.பென்னிக்ஸ் என்பவர் நடத்தி வரும் மொபைல் கடையை அடைக்கும்படி மிரட்டிய காவலர்கள் நியாயமான காரணங்கள் ஏதுமின்றி பென்னிக்ஸையும், இவரது தந்தை ஜெயராஜையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு இருவரையும் மிகவும் மோசமான முறையில் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். காவல்துறை நடத்திய மனிதத் தன்மையற்ற வன்தாக்குதலில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் உயிருக்கு ஆவ்ட்க்பத்தான நிலைக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அவர்கள் இருவரையும் கோவில்பட்டி சார்புச் சிறையில் அடைத்துள்ளனர். அங்கு இருவரும் மரணமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் உடல்களையும் உடற்கூராய்வு சோதனைக்காக பாளையங்கோட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர் என்ற அதிர்ச்சியளிக்கும் செய்தி கிடைத்துள்ளது.
காவல்துறையின் அத்துமீறல்களை தடுக்க வேண்டும் என பல நேரங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை பல்வேறு தீர்ப்புகளில் காவல்துறையின் அத்துமீறல்களை எச்சரித்து, வழிகாட்டும் நெறிமுறைகளையும் வழங்கியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் ஆணையம் என பல்வேறு அமைப்புகளும் காவல்துறையின் சட்ட அத்துமீறல்களை தடுக்க போராடி வருகின்றன. ஆனால், காவல்துறை எதனையும் பொருட்படுத்தாமல் சகல அதிகாரங்களையும் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு, மனிதர்களை அழித்தொழிக்கும் கொலை பாதகச் செயலில் ஈடுபடுவது தன் தொடர்ச்சியைத் தான் சாத்தான்குளம் சம்பவம் வெளிப்படுத்துகிறது. சாத்தான்குளம் காவல்துறையின் காட்டுமிராண்டிச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள், அந்த காவல் நிலையத்தின் அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். கடுமையான தாக்குதலுக்கு ஆளான நிலையில் விசாரணைக்காக சென்றவர்களின் பாதிப்பு நீதித்துறை நடுவர் மன்றத்தின் கவனத்திற்கு செல்லாமல் யாரால் தடுக்கப்பட்டது.
கோவில்பட்டி சார்பு சிறையில் அடைக்கப்பட்ட போது அவர்கள் உடல் நலம் குறித்து விசாரிக்கப்பட்டதா? அல்லது அங்கும் அவர்கள் தாக்கப்பட்டார்களா? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. இவை குறித்த நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மொபைல் கடை நடத்தி வரும் பென்னிக்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் மரணத்திற்கு சாத்தான்குளம் காவலர்களே காரணம் என்பதால் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
கொடூரமாக கொல்லப்பட்ட பென்னிக்ஸ், ஜெயராஜ் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரவை முன் வைத்துள்ள கோரிக்கையை ஏற்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், காவல்துறையின் அத்துமீறல்களை கண்டித்து நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆதரிக்கிறது.
காவல்துறை தாக்குதலில் மரணமடைந்த ஜெ பென்னிக்ஸ், ஜெயராஜ் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது"
இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.