Published : 12 Sep 2015 11:43 AM
Last Updated : 12 Sep 2015 11:43 AM

இங்கிலாந்து பல்கலையில் ஆங்கில பயிற்சிக்கு உடுமலை கல்லூரி மாணவி தேர்வு

உடுமலை அரசு கல்லூரி மாணவி, இங்கிலாந்து பல்கலைக்கழகத்துக்கு சென்று பயில தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் சார்பில் அரசு கல்லூரியில் பயிலும் மாணவர் வெளிநாட்டில் ஒரு பருவம் தங்கிப் பயிலும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் உடுமலையைச் சேர்ந்த அரசு கல்லூரி மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து கல்லூரி முதல்வர் ஆ.கிருட்டிணாள்மேரி சுகுணவதி கூறியதாவது:

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவி அ.சுபஸ்ரீ பலகட்ட தேர்வுகளுக்குப்பின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்திலுள்ள ஆர்ம்ஸ்கிர்க் (Ormskirk) நகரிலுள்ள எட்ஜ் ஹில் பல்கலைக்கழகத்தில் (Edge Hill University) செப்டம்பர் 14 முதல் டிசம்பர் 19 முடிய ஒரு பருவம் (நான்கு மாதங்கள்) பயிற்சி பெறுவார். இதற்கான செலவுகளை தமிழக அரசே ஏற்றுக்கொள்கிறது என்றார்.

இதற்கு முன்னர் பல்வேறு இங்கிலாந்து நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இக்கல்லூரி மாணவ மாணவியர் 5 பேர் தேர்வு செய்யப்பட்டு சென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவியை ஆங்கில இலக்கியத் துறைத் தலைவர் அ.வாசுதேவன், பேராசிரியர்கள் வெ.ராமநாதன், பொ.தனசேகரன், த.செல்வராஜ் மற்றும் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் வாழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x