

தூத்துக்குடியில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரத்தில் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ள தமிழ்நாடு வணிகர் சங்கம் நாளை முழுக்கடையடைப்பு நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார் தந்தை, மகனை அழைத்துச் சென்று தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் சப் ஜெயிலில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் 12 மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தை அனைத்து எதிர்கட்சித்தலைவர்களும் கண்டித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தையும் மகனுமான ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளன.
இந்நிலையில் இருவரும் வணிகர்கள் என்பதால் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, வணிகர் சங்கம் களத்தில் குதித்துள்ளது. வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா டிஜிபியிடம் மனு அளித்துள்ளார்.
“கொடூரமான கொலைக்கு முதல்வரும், டிஜிபியும் வியாபாரிகளுக்கு நீதி வழங்க வேண்டும். ஒரே ஆண்மகன் குடும்பத்தில் இருந்த நிலையில் அவரும் கொல்லப்பட்ட நிலையில் 3 பெண்கள் உள்ள குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் முழுக்கடையடைப்பு நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர்சங்க தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பு;
“கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும், கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு நடத்தப்படும்”.
என தமிழ்நாடு வணிகர்சங்க தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.