

அதிகாரப் பொறுப்பில் உள்ளோர் ஒதுங்கி கொண்டதால் கல்வி வியாபாரிகள் ஆன்லைன் கடை விரித்து கல்லாக்கட்டும் வேலையை கனஜோராக நடத்தி வருகின்றனர் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஜூன் 23) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா நோய் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து, மனித வாழ்வின் பெரும் சவலாகியுள்ளது. இந்த புதுவகை கரோனா நோய் பெருந்தொற்று தடுக்கப்படவோ அல்லது முறிக்கப்படவோ உலகில் எந்த நாட்டிலும் இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்பது பயத்தையும், பீதியையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்த பெருநோய்தொற்று பரவாமல் தடுக்க தனிமனித இடைவெளி, முகக்கவசம், கையுறை அணிதல், கிருமிநாசினி போன்ற தனிநபர் நோய்தடுப்பு சாதனங்கள் மட்டுமே இருப்பதாக எச்சரிக்கை செய்யப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பொது முடக்கம், நோய்கள் தடுப்பு சட்டம் 1897, பிரிவு 2-ன்கீழ் நடவடிக்கைகள், ஊரடங்கு உத்தரவுகள் என்பது மட்டுமே மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளாக இருக்கின்றன. இந்த நெருக்கடியும், துயரமுமான காலத்தில் மக்கள் உணவு பொருள்கள் கிடைக்காமல் பரிதவித்து வருகிறார்கள்.
கரோனா நோய் தொற்று பரிசோதனை செய்து கொள்ள வழியில்லாது அலைந்து வருகிறார்கள். நெருக்கடி கால வாழ்க்கைக்கான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதில் மாநில அரசு கவனம் செலுத்தவில்லை. மாறாக மக்கள் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ள முயன்று வருகின்றது.
கடந்த மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பதை தீர்மானிக்க முடியாத நிலை தொடர்கிறது. கரோனா நோய் தொற்று பாதிப்புக்கு எப்போது நிற்கும் என்பது 'கடவுளுக்கு தான் தெரியும்' என கூறிய முதல்வர், தனது கடமைப் பொறுப்புகளை கை கழுவி விட்டார்.
கல்வி நிலையங்களை எப்போது திறப்பது என்பதை முதல்வர் அறிவிப்பார் என பள்ளிக்கல்வி அமைச்சர் தனது கடமைப் பொறுப்புகளை சானிடைசர் போட்டு துடைத்துக் கொண்டார். அதிகாரப் பொறுப்பில் உள்ளோர் ஒதுங்கி கொண்டதால் கல்வி வியாபாரிகள் ஆன்லைன் கடை விரித்து கல்லாக்கட்டும் வேலையை கனஜோராக நடத்தி வருகின்றனர்.
சின்னஞ்சிறு குழந்தைகள் உட்பட ஆன்லைன் கல்வி என்ற பெயரில் மாணவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடைபெற்று வருகின்றது. குழந்தைகள் நல நிபுணர்கள், குழந்தைகள், சிறுவர்கள் கையில் அலைபேசியை கொடுக்காதீர் என எச்சரிக்கை செய்துள்ளனர்.
ஆனால், கல்வி வியாபாரிகளோ குழந்தைகளுக்கு தனியாக அலைபேசி வாங்கி கொடுத்து, இணையதள இணைப்பு பெற்றுக் கொடுக்க வேண்டும் என நிர்பந்தம் செய்து வருகிறார்கள். பல பகுதிகளில் இணையதளத்தின் வலைத் தொடர்பு இணைப்பு கிடைக்காத அவல நிலையில் பெற்றோர்கள், குழந்தைகள் படும்பாடு பெரும் துயரமானது.
சில வாரங்களாக நடந்து வரும் ஆன்லைன் பாடமுறையை கவனிக்கும் போது அது படுதோல்வி அடைந்திருக்கிறது என்பதை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம். கரோனா நோய் பெருந்தொற்று தாக்குதல் தொடரும் நிலையில் கல்வி ஆண்டையும், பாட எண்ணிக்கைகளையும் குறைத்து, மாணவர்களுக்கு வகுப்பறைகளில் நேரில் போதிக்கும் வழிவகை குறித்து திட்டவட்டமான முடிவு எடுக்க வேண்டும்.
அதுவரை ஆன்லைன் கல்வி எனும் பகல் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் ஆகியோரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது"
இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.