Published : 23 Jun 2020 04:22 PM
Last Updated : 23 Jun 2020 04:22 PM

சிறையில் தந்தை, மகன் மரணம்: சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்; காவல்துறை தலைவர் ஜே.கே. திரிபாதிக்கு கனிமொழி மனு

கனிமொழி: கோப்புப்படம்

சென்னை

கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை, மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, போலீஸார், சம்பந்தப்பட்டோர் அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, தமிழக காவல்துறை தலைவர் ஜே.கே. திரிபாதிக்கு மனு அளித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக காவல்துறை தலைவர் (சட்டம் - ஒழுங்கு) ஜே.கே. திரிபாதியிடம், தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக உறுப்பினர் கனிமொழி இன்று (ஜூன் 23) மனு அளித்துள்ளார்.

ஜே.கே.திரிபாதி: கோப்புப்படம்

அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

"சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் ஏபிஜே மொபைல் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னீஸ் ஆகியோரை சாத்தான் குளம் காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸார் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து கண்மூடித் தனமான அடித்து உதைத்து, அதில் அவர்கள் இருவரும் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

காவல்நிலையத்தில் போலீஸாரின் தாக்குதலுக்கு உள்ளான அவர்கள் இருவருக்கும் மருத்துவ உதவிகள் கொடுக்காமல், அவர்கள் தாக்கப்பட்டதையும் மாஜிஸ்திரேட்டிடம் மறைத்து நீதிமன்ற காவல் பெற்று கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளது மனிதநேயமற்றது. மிக மோசமான மனித உரிமை மீறல். சட்டத்தின் ஆட்சி தமிழ்நாட்டில் செத்து விட்டதா என்ற அடிப்படைக் கேள்வியை இந்த மரணங்கள் எழுப்புகின்றன.

ஊரடங்கு நேரத்தில் கடை நடத்தினார் என்பதற்காக உயிரையே பறிக்கும் வன்முறை தாக்குதலில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இவ்வளவு கொடூரமான கொலை குற்றத்தில் ஈடுபட்ட அந்த காவல்துறை அதிகாரிகளை ஆயுதப்படைக்கு மாற்றி விட்டால் மட்டும் நீதி வழங்கியதாக அர்த்தம் ஆகாது. பறிபோன உயிர்களை யார் திருப்பிக் கொடுப்பது? ஆகவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இது போன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடக்காமல் பார்க்க வேண்டிய முழுப்பொறுப்பு காவல்துறை தலைவர் என்ற முறையில் தங்களுக்கு இருக்கிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

ஜெயராணியின் மனுவினையும் தங்களது நடவடிக்கைக்காக அனுப்புகிறேன். அவரது கணவர் ஜெயராஜ் மற்றும் மகன் பென்னீஸ் ஆகியோரின் மரணத்திற்கு காரணமான உதவி ஆய்வாளர்கள், போலீஸார், சம்பந்தப்பட்டோர் அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருவரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்"

இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x