

மதுரையில் சென்னை, மகாராஷ்டிரா போல் ‘கரோனா’ வைரஸ் தொற்று வேகம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நோய் பரவும் வேகத்தைத் தடுக்க வீடு வீடாக காய்ச்சல் கண்டறியும் குழு, தொடர்பு கண்டறியும் குழு மற்றும் கிருமி நாசினி குழு ஆகிய மூன்று வகை குழுக்களை மதுரை மாநகராட்சி அமைத்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக ‘கரோனா’ வைரஸ் கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது. நேற்று உச்சக்கட்டமாக 153 பேருக்கு ‘கரோனா’ தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் வரை மாநகராட்சிப்பகுதியில் 644 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், தற்போது 321 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
சென்னை, மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் மூலம் இந்த தொற்று நோய் மதுரையில் சமூக பரவலாக மாறியுள்ளது. மதுரையில் பரவும் தொற்று வேகம் சென்னை, மகாராஜ்டிரா போல் இருப்பதாக சுகாதாரத்துறை கவலையடைந்துள்ளது. அதனால், பரவல் சீராக அதிகரிக்காமல் தினமும் 5 முதல் 15 வரையே தொற்று கண்டறியப்பட்ட மதுரையில் திடீரென்று தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட தொடங்கியுள்ளது. அதுபோல் உயிரிழப்புகளும் ஏற்படத்தொடங்கியுள்ளது.
ஏற்கெனவே மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் கட்டுப்படுத்தப் பகுதியில் மட்டும் வீடு, வீடாக காய்ச்சல், சளி உள்ளிட்ட ‘கரோனா’ தொற்று கண்டறியும் குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. ஆனால், தற்போது ‘கரோனா’ தொற்று கையை மீறி சென்றுவிட்டதால் 100 வார்டுகளிலும் மாநகராட்சி கவனம் செலுத்த வேண்டிய உள்ளது.
அதனால், 100 வார்டுகளிலும் உள்ள சுமார் 4 லட்சம் வீடுகளில் காய்ச்சல் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ள 1400 களப்பணியாளர்கள் கொண்ட காய்ச்சல் கண்டறியும் குழுக்களை மாநகராட்சி அமைத்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறியதாவது:
1,400 களப்பணியாளர்களையும் ‘கரோனா’ வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க வீடு வீடாகச் சென்று காய்ச்சல் கண்டறியும் குழு, தொடர்பு கண்டறியும் குழு மற்றும் கிருமி நாசினி குழு ஆகிய மூன்று வகை குழுக்களாகப் பிரித்து இந்த பரிசோதனை நடக்கிறது.
இந்தக் குழுவில் உள்ள ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 100 வீடுகள் வீதம் மூன்று நாட்களுக்கு 300 வீடுகளில் தேவையான மருத்துவ உபகரணங்களுடன் கணக்கெடுப்பு பணியினை மேற்கொள்வார்கள்.
பொதுமக்கள் கணக்கெடுக்க வரும் காய்ச்சல் கண்டறியும் குழுவிற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். தங்கள் பகுதியில் யாருக்கேனும் காய்ச்சல் இருப்பது தெரிய வந்தால் கணக்கெடுப்பு குழுவினரிடம் தெரிவிக்க வேண்டும். மேலும், மாநகராட்சியின் தகவல் மைய எண். 842 842 5000 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதுபோல், கரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறியப்பட்ட வார்டுகளில் மேற்கொண்டு தொற்று பரவாமல் தடுப்பதற்கு சுகாதார அலுவலர்கள் கண்காணிப்பில் சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார்வையில் 150 நபர்கள் கொண்ட கிருமி நாசினி குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் கரோனா நோய் தொற்று கண்டறியப்பட்ட வீடுகளில் தினமும் காலை, மாலை என இரண்டு வேளைகளில் கிருமி நாசினி மருந்துகள் தெளிப்பார்கள்.
மேலும், கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் உள்ள வணிக பயன்பாட்டில் உள்ள இடங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தினமும் கிருமிநாசினி மருந்து தெளித்து அதன் விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்பு கண்டறியும் குழு நியமனம்:
மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் உள்ள தெருக்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கு 100 வார்டுகளிலும் நான்கு உதவி வருவாய் அலுவலர்கள் கண்காணிப்பில் 20 கணக்கர்கள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் மேற்பார்வையில் 100 வருவாய் உதவியாளர்களை களப்பணியாளர்களாக கொண்ட தொடர்பு கண்டறியும் குழு(Contact Tracimg Team) அமைக்கப் பட்டுள்ளது.
இக்குழுவினர் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் கொரோனா தொற்று நோய் கண்டறியப்பட்டவர்களின் விபரங்களை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள குழுவுடன் இணைந்து சேகரித்தல், நோய் தொற்று உள்ளவர்களின் வீட்டு தொடர்பில் உள்ளவர்கள், மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் உள்ளவர்களின் விவரங்களைகண்டறிந்து சோதனைக்கு உட்படுத்துவார்கள்.
அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் பணிபுரியும் மருத்துவ அலுவலர்கள் மேற்கண்ட பணிகளின்போது நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள குழுவிடமிருந்து பெறப்படும் விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க ஆணையாளர் விசாகன் உத்தரவிட்டுள்ளார்.