

தூத்துக்குடியில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரத்தில் போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.
தூத்துக்குடியில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார் தந்தை, மகனை அழைத்துச் சென்று தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் சப் ஜெயிலில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் 12 மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தை அனைத்து எதிர்கட்சித்தலைவர்களும் கண்டித்து வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும், குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவு:
“தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தையும் மகனுமான ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வு கடும் கண்டனத்திற்குரியது.
காவல்துறையினர் தாக்கியதால்தான் இருவரும் பலியாகியிருப்பதாக வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இதுகுறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
வணிகர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதுடன், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்”.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.