

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண்மருத்துவமனை முதல்வர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்று பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கின்றனர். இது குறித்து கல்வியாளர்கள், குழந்தை நல செயற்பாட்டாளர்கள், எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ஆன்லைன் வகுப்புகளால் 6-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் கண்பார்வை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த விமல்மோகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், “கரோனா பாதிப்பில் இருந்து மாணவர்களை பாதுகாக்க, பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கல்வி என்ற பெயரில் அனைத்து கல்வி நிறுவனங்களும் ஆன் லைன் வகுப்புக்களை நடத்தி வருகின்றன. இது மாணவர்களுக்கு மன உளைச்சலையும், உடல் ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆன் லைன் வகுப்புகளுக்கு தேவையான மொபைல் ஃபோன், லேப்டாப் போன்ற கருவிகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. தொடர்ச்சியாக மொபைல் ஃபோன்களையும், லேப் டாப்களையும் பார்த்தால் ரெடீனாவில் பாதிப்பு ஏற்படும் என கண் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆன் லைன் வகுப்புக்கள் காலை முதல் மாலை ஆறு மணி நேரம் வரை நடக்கிறது. இதனால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆன் லைன் வகுப்புக்கள் நடத்த தடை விதிக்க வேண்டும்.
ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை நாளொன்றுக்கு இரண்டு மணி நேரங்களுக்கு மேல் ஆன் லைன் வகுப்புக்களை நடத்த கூடாது என உத்தரவிட வேண்டும். மொபைல் போன்களை பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து கண் மருத்துவ நிபுணர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்”. எனக் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண்மருத்துவமனை முதல்வர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 25-ம் தேதி ஒத்திவைத்தனர்.