Last Updated : 23 Jun, 2020 02:25 PM

 

Published : 23 Jun 2020 02:25 PM
Last Updated : 23 Jun 2020 02:25 PM

அதிக பயணிகளை ஏற்றினால் அதிகாரிகள் மெமோ, ஏற்ற மறுத்தால் பயணிகள் மோதல்: கரோனா காலத்தில் வேதனையுடன் புணிபுரியும் ஓட்டுனர், நடத்துனர்கள்

”அதிகமாக ஆட்கள் ஏற வேண்டாம் என்றால் பயணிகள் தகராறு செய்கின்றனர், அதிக பயணிகளை ஏற்றினால் அதிகாரிகள் மெமோ தருகின்றனர்.. நாங்கள் என்ன தான் செய்வது?” என்ற வேதனையுடன் பணிபுரிகின்றனர் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர், நடத்துனர்கள்.

தமிழகத்தில் கரோனா ஊரடங்கால் மார்ச் 24 முதல் அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஜூன் 1 முதல் 50 சதவீத அரசு பஸ்களை இயக்க அரசு அனுமதி அளித்தது. ஒரு பஸ்சில் 60 சதவீத பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. ஜூன் 10 முதல் தனியார் பஸ் போக்குவரத்தும் தொடங்கியது.

மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலங்கள் அடங்கிய மதுரை அரசு போக்குவரத்து கழக கோட்டம், கும்பகோணம் கோட்டத்துக்கு உட்பட்ட சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 50 சதவீத பஸ்கள் என்ற அடிப்படையில் 1477 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஒவ்வொரு பஸ்சிலும் 60 சதவீத பயணிகள் அடிப்படையில் 52 முதல் 55 சீட்களை கொண்ட வெளியூர் பஸ்களில் 34 பயணிகளும், 40 சீட்களை கொண்ட உள்ளூர் பஸ்களில் 24 பயணிகளையும் ஏற்ற வேண்டும்.

பஸ் போக்குவரத்து தொடங்கிய சில நாட்கள் வரை கரோனாவுக்கு பயந்து பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது நாளுக்கு நாள் பஸ்சில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொலைதூர பஸ்களில் நூறு சதவீதத்துக்கும் அதிகமாக பயணிகள் பயணம் செய்கின்றனர்.

60 சதவீத பயணிகள் மட்டுமே ஏற வேண்டும் என வலியுறுத்தும் ஓட்டுனர், நடத்துனர்களிடம் பயணிகள் தகராறு செய்து முண்டியடித்து பஸ்களில் ஏறுகின்றனர். வேறுவழியில்லாமல் அதிகளவு பயணிகளுடன் பஸ்களை இயக்கி அதிகாரிகளின் ஆய்வில் சிக்கும் போது சம்பந்தப்பட்ட பஸ்சின் நடத்துனர், ஓட்டுனருக்கு மெமோ கொடுக்கின்றனர்.

இதனால் கரோனா காலத்தில் ஓட்டுனர், நடத்துனர்கள் வேதனையுடன் பணிபுரிகின்றனர். மேலும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக பணியாளர் சம்மேளனத்தின் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.சம்பத் கூறுகையில், கரோனா காலத்தில் ஓட்டுனர், நடத்துனர்கள் உயிரை பணயம் வைத்து பணிபுரிகின்றனர். குறைந்தளவு பஸ்கள் இயக்கப்படுவதால் பயணிகள் அதிகளவில் பஸ்களில் பயணம் செய்கின்றனர்.

இதற்கு ஓட்டுனர், நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும். இது தொடர்பாக மாநிலம் முழுவதும் ஒரே நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என போக்குவரத்து துறை முதன்மை செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

மதுரை மண்டல தொமுச பொதுச்செயலாளர் மேலூர் அல்போன்ஸ் கூறுகையில், பஸ்களின் பயணிகளின் எண்ணிக்கையை முறைப்படுத்த தனி ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x