தமிழக அரசு நீர்நிலைகளைப் பராமரிக்கும் லட்சணத்திற்கு கல்லணைக் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பே சாட்சி; தினகரன் விமர்சனம்

டிடிவி தினகரன்: கோப்புப்படம்
டிடிவி தினகரன்: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழக அரசு நீர்நிலைகளைப் பராமரிக்கும் லட்சணத்திற்கு கல்லணைக்கால்வாயில் ஏற்பட்ட உடைப்பே சாட்சி என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஜூன் 23) வெளியிட்ட அறிக்கை:

"பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட்ட பிறகும் காவிரி டெல்டாவின் பல இடங்களில் அவசரக்கோலத்தில் அரைகுறையாக தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசுக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த இரண்டாண்டுகளாக கடைசி நேரத்தில் ஆறுகள், வாய்க்கால்களைப் பெயரளவுக்குத் தூர்வாரி கணக்கு காண்பிப்பதையே வழக்கமாக வைத்திருப்பதாக விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் தமிழக அரசு, இந்தாண்டும் டெல்டா பகுதி பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்ட பின்னரும் சில கிளை ஆறுகளிலும் வாய்க்கால்களிலும் கட்டுமான பணிகளை மேற்கொள்வதாக செய்திகள் வருகின்றன. இதனால் ஆங்காங்கே தண்ணீரைத் தடுத்து நிறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிகிறது.

இதைத்தொடர்ந்து, கட்டுமானத்தின் ஈரம் காய்வதற்குள் தண்ணீரைத் திறந்துவிடும் போது புதிய கட்டுமானங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிடும். கடந்த இரண்டாண்டுகளாக இப்படித்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டும் அதையே செய்கிறார்கள் என்று வரும் செய்திகள் வேதனையளிக்கின்றன.

இதுமட்டுமல்ல, தமிழக அரசு எந்த லட்சணத்தில் தூர்வாருகிறது என்பதற்குச் சமீபத்தில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கல்லணைக் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பே சாட்சியாகும். கரையைச் சரியான முறையில் பலப்படுத்தாததால் இந்த உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பருவமழை தொடங்கி தண்ணீர் வரத்து அதிகரிக்கும் போது கல்லணைக் கால்வாயில், மேலும் பல இடங்களில் உடைப்பு ஏற்படும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர். ஆனால், முதல்வரின் நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ள பொதுப்பணித்துறை, இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் 'எதிலே டெண்டர் விட்டு நிதி ஒதுக்க முடியும்' என்பதில்தான் முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறது.

தூர்வாருவதைத்தான் இந்த ஆட்சியாளர்கள் முறையாகச் செய்யவில்லை; கரைகளில் உடைப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்கான பணிகளையாவது செய்திட வேண்டும். பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்டவை இணைந்து தொடர்ந்து நீர்நிலைகளைக் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in