Published : 23 Jun 2020 14:16 pm

Updated : 23 Jun 2020 14:17 pm

 

Published : 23 Jun 2020 02:16 PM
Last Updated : 23 Jun 2020 02:17 PM

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் மாற்றம்; எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் குதித்த தூய்மைப் பணியாளர்கள்

corporation-commissioner-transferred

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக இருந்த சரவணகுமாருக்குப் பதிலாக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆசா அஜித்தை நியமித்துத் தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இதை ஏற்காமல், சரவணகுமாரே தொடர்ந்து ஆணையராக இருக்கவேண்டும் என்று சொல்லித் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இதற்கு முன்புவரை நாகர்கோவில் நகராட்சியில் இருந்து வந்த ஆணையர்களுக்கு பொது மக்களோடு பெரிய அளவில் தொடர்பு இருந்தது இல்லை. ஆனால், சரவணகுமார் நாகர்கோவிலுக்கு வந்தது முதலே பல்வேறு ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுத்தார். நாகர்கோவில் மக்களுக்குத் தடையின்றிக் குடிநீர் விநியோகிக்கும் முக்கடல் அணையில் சிறுவர் பூங்கா, புறநகர் பகுதியில் மின் மயானம், நகர சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவாக்கம் செய்தது என சரவணகுமாரின் பணிகள் மக்களால் பாராட்டப்பட்டன. தற்போது கரோனா தடுப்புப் பணிகளையும் சிறப்பாகவே கையாண்டார். இதற்காக பல்வேறு தன்னார்வலர்களையும் ஒருங்கிணைத்தார்.

இதையெல்லாம்விட மிக முக்கியமாக நகராட்சியாக இருந்த நாகர்கோவிலை மாநகராட்சித் தரத்துக்கு மெருகேற்றியதில் சரவணகுமாரின் பங்களிப்பு மிக அதிகம். அதேநேரம், சரவணகுமார் ஆக்கிரமிப்புகளை அகற்றி வந்தது பெருவியாபாரிகள் முதல் விளிம்புநிலைத் தொழிலாளர்கள் வரை பலரது வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியது. மக்களிடம் ஆதரவைப் பெற்ற அளவுக்கு ஆக்கிரமிப்பை அகற்றிய விதத்தில் ஒருசாரரிடம் எதிர்ப்பையும் சம்பாதித்து இருந்தார்.

திமுகவும், வணிகர் சங்கங்களும் இவருக்கு எதிராக அவ்வப்போது போராட்டத்திலும் குதித்தன. இப்படியான சூழலில் சரவணகுமாரை மாற்றிவிட்டு மாநகராட்சியின் புதிய ஆணையராக ஆசா அஜித்தை நியமித்து உத்தரவிட்டது தமிழக அரசு. இந்தத் தகவல் தெரிந்ததும் தூய்மைப் பணியாளர்கள் இன்று காலையில் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கவந்த அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

இதுகுறித்து தூய்மைப் பணியாளர்கள் சிலர் இந்து தமிழ் திசை இணையத்திடம் கூறுகையில், ”துப்புரவுத் தொழிலாளர்கள் என அழைக்கப்பட்டு வந்த எங்களைத் தூய்மைப் பணியாளர்கள் என மரியாதையோடு அழைக்கக் காரணமே சரவணகுமார்தான். அரசுக்கும் இப்படியொரு வார்த்தையை இவர்தான் பரிந்துரைத்தார்.

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக இருந்த சரவணகுமார்

கூடவே, தமிழகத்திலேயே முதலாவதாக எங்களுக்குப் போலீஸாரை வைத்து கரோனாவின் தொடக்கத்தில் அணிவகுப்பு மரியாதையும் கொடுத்தார். ஒப்பந்தத் தொழிலாளர்களான எங்களுக்கு சரியான தேதியில் சம்பளம் தந்ததே இவர் வந்ததுக்குப் பின்பு தான். அதனால்தான் அவரது மாற்றக்கூடாது எனப் போராடி வருகிறோம்” என்றனர்.

ஆனால் அரசுத் தரப்பிலோ, “ஐஏஎஸ் அதிகாரிகளைத்தான் மாநகராட்சி ஆணையராக நியமிக்க வேண்டும் என்பது விதி. அந்தவகையில்தான் இப்போது ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்” என்கின்றனர்.

ஒரு அதிகாரி மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் மட்டத்தில் போராட்டத்தை முன்னெடுப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆக்கிரமிப்புகளின் அகற்றத்தால் சிலரது வெறுப்பைப் பெற்றிருந்தாலும், பலரது இதயத்தையும் வென்றிருக்கிறார் முன்னாள் ஆணையர் சரவணகுமார்!

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Corporation commissionerநாகர்கோவில்எதிர்ப்புதூய்மைப் பணியாளர்கள்போராட்டம்மாநகராட்சி ஆணையர்மாநகராட்சி ஆணையர் மாற்றம்சரவணகுமார்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author