

தமிழகத்தில் ரூ.195.94 கோடியில் 4 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் விதி 110-ன் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:
நடப்பு ஆண்டில் கடலூர் மற்றும் நாகை மாவட்டம் பரங்கிப்பேட்டை, குமராட்சி, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 17 குடியிருப்புகள், 70 வழியோர ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.24.18 கோடியிலும், திருப்பூர், பல்லடம் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 155 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.42.50 கோடியிலும், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, கே.சி.பாளையம், பள்ளபாளையம், காஞ்சிகோயில், நள்ளம்பட்டி, பெத்தம்பாளையம், குன்னத் தூர், ஊத்துக்குளி பேரூராட்சி கள், சென்னிமலை, பெருந் துறை, ஊத்துக்குளி ஒன்றியங் களைச் சேர்ந்த 492 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.123.76 கோடி யிலும், தேனி மாவட்டம் கடமலைக் குண்டு - மயிலாடும்பாறை, ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 16 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.5.50 கோடியிலும் என மொத்தம் ரூ.195.94 கோடியில் 4 புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன்மூலம் 4 லட்சத்து 9 ஆயிரம் பேர் பயன்பெறுவர்.
சென்னை மாநகரின் வருங்கால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு நீராதாரங்களை பாதுகாத்து சீரமைக்க ‘நீடித்த குடிநீர் ஆதார பாதுகாப்பு இயக்கம்’ தொடங்கப்படும். இதன்படி, பெரிய குடியிருப்பு வளாகங்கள், அரசு கட்டிடங்கள், பள்ளி, கல்லூரிகள் போன்ற பெரும் வளாகங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்தப்படும். சென்னை மாநகரில் 15 பெரும் வளாகங்கள் தேர்வு செய்யப்பட்டு மாதிரி பணிகள் மேற்கொள்ளப்படும்.
மழைநீர் வடிகால்கள் மூலம் நிலத்தடி நீரை மேம்படுத்தும் மாதிரிப் பணிகள் 2 இடங்களிலும், நீராதாரங்களை சீரமைக்கும் மாதிரிப் பணிகள் 15 ஏரிகளிலும் மேற்கொள்ளப்படும். இந்த மாதிரிப் பணிகளுக்காக ரூ.5 கோடி ஒதுக் கப்படும்.
நடந்து செல்லுதல், மிதி வண்டிகள் போன்ற மோட்டார் அல்லாத போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் முதல்கட்டமாக திருச்சி, கோவை, திருப்பூர் மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்படும். தொடர்ச்சி யான நடைபாதைகள், மிதி வண்டிகளுக்கென தனி பாதைகள், பேருந்து, ரயில் நிலையங்களுக்கு அருகில் மிதிவண்டிகள் பயன்பாட்டு வசதி ஆகியவை திருச்சி, கோவை, திருப்பூர் மாநகராட்சிகளில் ரூ.50 கோடியில் ஏற்படுத்தப்படும்.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் தொடர்ச்சியாக இந்த ஆண்டில் 10 நகராட்சிகள், 214 பேரூராட்சிகளில் ரூ.69 கோடியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பள்ளிக்கரணை, உத்தண்டி உள்ளிட்ட 11 பகுதிகளுக்கு சோழிங்கநல்லூரில் 54 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட, மின் உற்பத்தி செய்யும் அமைப்புகளுடன் கூடிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.65.97 கோடியில் அமைக்கப்படும்.
கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, மகாகவி பாரதியார் நகர், பழைய, புதிய வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம், பெரம்பூர், வியாசர்பாடி, அம்பத்தூர், முகப்பேர், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், அயனாவரம், எழும்பூர், சேத்துப்பட்டு, ஆயிரம்விளக்கு, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், வடபழனி, தியாகராய நகர், அரும்பாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் 310 கி.மீ. நீளத்துக்கு புதிய குடிநீர் குழாய்களும், விடுபட்ட தெருக்களுக்கு புதிய குழாய்களும் ரூ.116 கோடியில் அமைக்கப்படும்.
சென்னை மாநகரில் 1,260 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் 750 பேருந்து நிறுத்தங்களில் நவீன நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ள. நடப்பு ஆண்டில் ரூ.51 கோடியில் 510 பேருந்து நிறுத்தங்களில் நவீன நிழற்குடைகள் அமைக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.