ஒகேனக்கல்லில் மீண்டும் விபரீதம்: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 18 இளைஞர்கள் உயிருடன் மீட்பு

ஒகேனக்கல்லில் மீண்டும் விபரீதம்: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 18 இளைஞர்கள் உயிருடன் மீட்பு
Updated on
2 min read

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நேற்று பெரும் ஆபத்தில் சிக்கிய 18 கேரள இளைஞர்கள் காப்பாற்றப்பட்டனர்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி சென்னையில் இருந்து சுற்றுலா வந்த 9 பேர் பரிசலில் சென்றனர். அப்போது பரிசல் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகி னர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக ஒகேனக்கல்லில் பரிசல் பயணம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்தின் தாக்கத்தால் ஒகேனக்கல் வரும் பயணிகளின் எண்ணிக் கையும் கடந்த வாரத்தில் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் ஒரு மிகப்பெரும் விபத்துக்கான சூழல் ஏற்பட்டது.

கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியில் இருந்து அபுசலாம் என்பவர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் குழுவாக பேருந்து ஒன்றில் நேற்று ஒகேனக்கல் சுற்றுலா வந்தனர். ஒகேனக்கல் பரிசல் துறை அருகேயுள்ள சிறுவர் பூங்கா பகுதியில் சில நூறு அடி தூரத்தில் ஆற்றின் நடுவே தீவு போன்ற பகுதியும், மரக்கூட்டமும் உள்ளது. இந்த இடத்துக்கு பரிசல் மூலம் செல்வதுதான் பாதுகாப்பானது. ஆற்றில் இறங்கி நடந்து செல்வது ஆபத்தான செயல்.

ஆனால், கேரளா இளைஞர்கள் 18 பேர் நேற்று காலை 11 மணியளவில் மனித சங்கிலிபோன்று கை கோர்த்தபடி ஆற்றுக்குள் இறங்கி தீவு பகுதிக்குச் செல்ல முயற்சித்துள்ளனர். முக்கால் பாக தூரத்தை கடந்துவிட்ட நிலையில் இளைஞர்கள் குழுவில் ஒருவர் வழுக்கி ஆற்றில் விழுந்துள்ளார். அதைத் தொடர்ந்து 18 பேரும் ஆற்றுக்குள் சரிந் துள்ளனர். விழுந்தவர்கள் தண்ணீரின் வேகத்தை எதிர்த்து கரைக்குச் செல்ல முடியாமல் தத்தளித்துள்ளனர்.

அவ்வழியே நடந்து சென்ற பரிசலோட்டி ரங்கசாமி என்பவர் இதைக்கண்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி குழுவினர் நிலைய அலுவலர் ஜானகிராமன் தலைமையில் 4 பரிசலோட்டிகள் உதவியுடன் பரிசலில் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

ரஃபி, சாகல், இர்ஷாத், ஆசிப், இர்ஷாத்கான், முசீப் உள்ளிட்ட 18 பேரை யும் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். இன்னும் சில மீட்டர் தூரம் நீரில் இழுத்துச் செல்லப்பட்டிருந்தால் இந்த இளைஞர்களின் நிலைமை விபரீதம் ஆகியிருக்கக் கூடும். ஏனெனில் சில மீட்டர் தூரம் சென்றதும் தண்ணீர் ஆழமான இடத்தை நோக்கி அருவியாக பாய்கி றது. அதில் விழுந்தால் நீச்சல் தெரிந்த வர்கள்கூட நீரின் சுழற்சி வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது எனக் கூறப்படுகிறது.

ஒகேனக்கல்லுக்கு இதர நாட்களில் குறைவான பயணிகள் மட்டுமே வந் தாலும்கூட வார இறுதி நாட்களிலும், தொடர் விடுமுறை நேரங்களிலும் அதிகப்படியான மக்கள் வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்த தற்போது ஒகேனக்கல்லுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள காவலர்கள், ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் போதவில்லை.

எனவே சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட வீரர்கள் அடங்கிய குழு ஒன்றை முக்கிய தினங்களில் ஒகேனக்கல்லில் பணியில் ஈடுபடுத்த வேண்டிய அவசிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதைச் செய்தால்தான் விதிமீறல்களால் நடக்கும் விபத்துகளை கட்டுப்படுத்த முடியும் என சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, நேற்றைய விபத்து குறித்து தகவல் அறிந்த காவல், வருவாய் மற்றும் வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளை பத்திரிகை யாளர்கள் அணுகியபோது, ‘அதுபோன்று எந்த சம்பவமும் நடக்கவில்லை’ என்று மழுப்பலான பதிலையே அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in