புதுச்சேரியில் சந்தைபுதுகுப்பத்தில் நடைபெறும் விவசாய அறுவடைப் பணிகளில் ஈடுபடும் விவசாயிகள்.
புதுச்சேரியில் சந்தைபுதுகுப்பத்தில் நடைபெறும் விவசாய அறுவடைப் பணிகளில் ஈடுபடும் விவசாயிகள்.

கரோனா ஊரடங்கிலும் தடையின்றி நடக்கும் விவசாயம்; ஆள் கிடைக்காமல் அவதியுறும் விவசாயிகள்

Published on

கரோனா ஊரடங்கால் தொழில் துறை முடங்கிப் போனாலும் தடையின்றி விவசாயம் நடைபெற்றாலும் ஆள் கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலின் முக்கிய தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. கடந்த 1970-ல் புதுச்சேரி விவசாய நிலப்பரப்பு 48 ஆயிரத்து 842 ஹெக்டேராக இருந்தது. கடந்த 2000-ம் ஆண்டில் 24 ஆயிரத்து 329 ஹெக்டேரானது. 2009-ல் 17 ஆயிரத்து 469 ஹெக்டேரான விவசாய நிலப்பரப்பு தற்போது 15 ஆயிரம் ஹெக்டேராகிவிட்டது. பல இடையூறுகளிலும் விடாமல் தொடரும் விவசாயிகளின் தன்முனைப்பே விவசாய நிலங்களை காப்பதற்கு முக்கிய காரணம்.

கரோனா நோய் அச்சம் காரணமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் இதர தொழில்துறை பாதிக்கப்பட்டாலும் விவசாய பணிகள் தொடர்ந்தன. பல இடங்களிலும் விவசாயிகள் நெல், கரும்பு, சவுக்கு, மரவள்ளி போன்றவற்றை பயிரிட்டுள்ளனர்.

அறுவடைக்குத் தயாரான நெல் மற்றும் கரும்பு அறுவடை வேலையும் தடையின்றி நடைபெறுகிறது. ஆனால், குறைவான இயந்திரம் மற்றும் விவசாய கூலி தொழிலுக்கு ஆள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

லிங்காரெட்டிபாளையம் விவசாயி கோவிந்தசாமி கூறுகையில், "கரோனா காலத்திலும் விவசாயத்தைத் தொடர்கிறோம். ஏனென்றால், தொடர்ந்து விவசாயம் செய்தால்தான் நிலம் நன்றாக இருக்கும். ஆனால், ஆள் பற்றாக்குறையால் அறுவடை பணிதான் தற்போது பாதிக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

காட்டேரிக்குப்பம் விவசாயி லோகநாதன் கூறுகையில், "நகரத்தில் பலரும் வேலையில்லை என்ற காரணத்தைக் கூறுகிறார்கள். உண்மையில் விவசாய பணிக்குதான் ஆள் இல்லை. விவசாய பணிக்கு வந்தால் நல்ல ஊதியம் கிடைக்கும்" என்று தெரிவித்தார்.

சந்தைபுதுகுப்பம் விவசாயி சாந்தமூர்த்தி கூறுகையில், "விவசாயத்தை குலத்தொழிலாக பலரும் செய்கிறோம். ஆட்கள் கிடைக்காததால் இயந்திரங்களுக்கு மாறினோம். இப்போது இயந்திரங்களும் போதியளவு விவசாயத்துக்குக் கிடைப்பதில்லை. பலரும் விவசாயப்பணிகளுக்கு திரும்பினால்தான் நிலங்களை வருங்காலத்துக்குக் காக்க முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது" என்றார்.

ஆட்கள் பற்றாக்குறையை தீர்க்க அரசு என்ன செய்கிறது என்று வேளாண்துறை தரப்பில் விசாரித்தபோது, "விவசாய பணிகளுக்கு போதிய ஆட்கள் கிடைக்காததால் சாகுபடி பணி சிரமத்தைக் குறைக்க பண்ணை இயந்திரமாக்கல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். பயனாளிகளுக்கு அதிகபட்சம் ரூ.2.50 லட்சம் வரை இயந்திரத்திற்கு ஏற்ப, 50 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. விவசாயிகள் வேளாண்துறையை அணுகலாம்" என்று தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in