மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய புதுச்சேரி கைதிக்கு கரோனா தொற்று உறுதி; தப்பிய இடத்திலேயே சரண் அடைந்து சிகிச்சை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

இருசக்கர வாகனத்தைத் திருடிய வழக்கில் கைதாகி மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற போது தப்பிய கைதிக்கு கரோனா தொற்று வைரஸ் உறுதியானது. இதைத்தொடர்ந்து, தாமாகவே தப்பிய இடத்துக்கே வந்து பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினரிடம் சரணடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புதுச்சேரி அரியாங்குப்பம் ராம்சிங் நகர் மாஞ்சாலையில் வசிக்கும் 24 வயது இளைஞர், கடந்த 20-ம் தேதி இருசக்கர வாகனத்தைத் திருடிய வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜராகும் முன்பு கரோனா பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டது. முடிவு வரும் வரை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருக்க மருத்துவ பணியாளர்கள் அறிவுறுத்தினர். பிற்பகலில் அங்கிருந்த கழிவறை தண்ணீர் குழாய் வழியாக தப்பிச் சென்றார்.

இந்நிலையில், 21-ம் தேதி வந்த மருத்துவ அறிக்கையில் ரமணாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, முதலியார்பேட்டை காவல்துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் காவல்நிலையங்களுக்கு புகைப்படத்தை அனுப்பி கரோனா தொற்றுள்ள கைதி என்று எச்சரிக்கையுடன் தகவல் அனுப்பினர். காவல்துறையினரும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு, நேற்று (ஜூன் 22) இரவு மீண்டும் கதிர்காமம் கோவிட் மருத்துவமனைக்கு வந்த ரமணா, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினரிடம் சரண் அடைந்தார். இதையடுத்து, கரோனா வார்டில் ரமணாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுதொடர்பாக காவல்துறையினரிடம் விசாரித்தபோது, "கரோனா தொற்று உறுதியானவுடன் ரமணாவுக்கு தொடர்புடையோரை கண்டு பரிசோதனைக்கு உட்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தோம். தமிழக பகுதியில் தலைமறைவாகியிருந்த அவர் தனக்கு கரோனா தொற்று இருப்பதை அறிந்து மருத்துவமனையிலேயே சரண் அடைந்துள்ளார். தற்போது கரோனா வார்டில் சிகிச்சை பெறுகிறார்" என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in