

தேசம் இன்று இரண்டு சோதனைகளை எதிர்க்கொண்டுள்ளது எனவும், இரண்டிலும் நம் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் எனவும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூன் 23) வெளியிட்ட அறிக்கை:
"தேசம் இன்று இரண்டு சோதனைகளை எதிர்க்கொண்டுள்ளது. ஒருபுறம் கரோனா என்ற கொடிய தொற்று நோய் தாக்கம் மறுபுறம் அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் எல்லை மீறுதல்களும் மறைந்திருந்து தாக்குதல்களிலும் ஈடுபடுகின்றன. இந்த இரண்டு சவால்களையும் மத்திய அரசு சாமர்த்தியமாகவும் சாதுர்யமாகவும் திறமையாகவும் சமாளித்து வருகிறது.
1962-ம் ஆண்டு நடந்த சீன தாக்குதலின் போதும் 1971-ம் ஆண்டு நடந்த வங்கதேச உரிமை மீட்பு போரின் போதும் அன்றைய மத்திய அரசுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களும் துணைநின்று தோள் கொடுத்தார்கள். ஒட்டுமொத்த தேசத்தின் ஒற்றுமை, ஒருங்கிணைந்த செயல்பாடும்தான் அன்றைய நம் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.
அதேபோல், இன்று நம் தேசம் எதிர்கொண்டுள்ள இரண்டு பிரச்சினைகளிலும் அதாவது, ஒன்று மக்களின் நலன் சார்ந்தது, அடுத்தது தேசத்தின் இறையாண்மையை சார்ந்தது. இது இரண்டுமே தேசத்தின் உயிரும் உடலும் ஆகும்.
இன்றைய இந்த இரு பிரச்சினைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களும் மக்களும் இனம், மதம், மொழி கடந்து இணைந்து செயல்பட வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பும் நல்க வேண்டும். இதன் மூலம் இரண்டு தளங்களிலும் நம் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். எந்த சோதனைகளையும் சந்திக்கும் வல்லமை கொண்டது இந்தியா என்பதை நிருபிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றி காண்போம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.