

திருவாரூர் மாவட்ட கடைமடை பகுதியான முத்துப்பேட்டை ஒன்றியம் ஜாம்புவானோடை கோரையாற்று நீரொழுங்கிக்கு வந்துசேர்ந்த காவிரி தண்ணீரில் நேற்று மலர் தூவி பார்வையிட்ட உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், காலனி பாசன வாய்க்காலுக்கு நீரொழுங்கியிலிருந்து தண்ணீரை திறந்துவிட்டார். இந்நிகழ்வில், ஆட்சியர் த.ஆனந்த் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர், அமைச்சர் ஆர்.காமராஜ் கூறியதாவது: இதற்கு முன்பு கடைமடை பகுதிக்கு காவிரி நீர் வருவதற்கு 10 நாட்களுக்கு மேலாகும். ஆனால், இம்முறை 4 நாட்களிலேயே திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்தடைந்துள்ளது. இது வரலாற்று சிறப்புவாய்ந்த நிகழ்வு. குறிப்பிட்ட காலத்தில் ஆறுகள் தூர்வாரப்பட்டதே இதற்கு காரணம். இதேபோல, மேட்டூர் அணையில் 306 நாட்கள் தொடர்ந்து 100 அடிக்கு நீர்மட்டம் காணப்பட்டது, நிகழாண்டு தற்போது வரை 24.70 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது போன்றவையும் சாதனை நிகழ்வுகள்தான் என்றார்.