

தமிழகத்தில் சென்னை மற்றும்அருகில் உள்ள செங்கல்பட்டு,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால் ஏழை மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில்கொண்டு இப்பகுதியில் வசிக்கும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, ஜூன் 22-ம்தேதி (நேற்று) முதல் வீடுவீடாக விற்பனை முனைய இயந்திரத்துடன் சென்ற ரேஷன் கடை பணியாளர்கள் குடும்ப அட்டைகளைப் பெற்று பதிவுசெய்து ரூ.1,000 நிவாரணத்தை வழங்கினர். பெரும்பாலும் தெருவாரியாக ரூ.1,000 நிவாரணத்தை கடை பணியாளர்கள் வழங்கி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் பேரூராட்சிகள், பூந்தமல்லி, திருவள்ளூர் (ஈக்காடு), சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 2,19,736 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 விநியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது.
சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளான குன்றத்தூர், மாங்காடு பேரூராட்சிகள், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் 82,147 குடும்ப அட்டைகளுக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் 1,22,129 குடும்ப அட்டைதாரர்களுக்கும், அடையாள அட்டை வைத்துள்ள 31,480 மாற்றுத் திறனாளிகளுக்கும் ரூ.1,000 நிவாரணம் வழங்கப்பட உள்ளது.