

திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய திரவ இயக்க உந்தும வளாக பொறியாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அம்மையம் நேற்று மூடப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓர் அங்கமாக இங்கு செயல்படும் இம்மையத்தில் விண்வெளியில் ராக்கெட்டுகளை செலுத்த உதவும் கிரையோஜெனிக் இயந்திரங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
இங்கு 700-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் 256 மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பொறியாளராக பணியாற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 28 வயது நபருக்கு கடந்த 3 நாட்களுக்குமுன் கரோனா அறிகுறி இருந்துள்ளது.
இதையடுத்து மகேந்திரகிரியில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் சந்தேகத்தின் பேரில் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இஸ்ரோ மையத்தில் அவருடன் பணியாற்றியவர்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரோ மையம் ஒரு நாள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று மூடப்பட்டது. அங்கு கிருமிநாசினி தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.