Last Updated : 22 Jun, 2020 10:24 PM

 

Published : 22 Jun 2020 10:24 PM
Last Updated : 22 Jun 2020 10:24 PM

மதுரையில் வறுமையால் காய்கறி விற்கும் மாணவி: உதவிக்கரம் நீட்டிய சமூக நலத்துறை- கல்வியைத் தொடர ஏற்பாடு

மதுரையில் வறுமையால் காய்கறி விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட 6-ம் வகுப்பு மாணவி அவரது கல்வியைத் தொடர சமூக நலத்துறை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளது.

மதுரை வில்லாபுரம் பகுதி வேலுப்பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது மகள் 2 ஆண்டுக்கு முன், தற்கொலை செய்தார். மருமகனும் வீட்டைவிட்டு சென்றதால், பேத்தி முருகேசுவரி (11), பேரன் விக்னேஷ் (8) ஆகியோரை பாட்டி மாரியம்மாள் வளர்க்கிறார்.

மாநகராட்சி பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் முருகேசுவரி வகுப்பில் முதல் மாணவியாக உள்ளார். வறுமையின் காரணமாக கரோனா ஊரடங்கையொட்டி மாணவி முருகேசுவரி அப்பகுதியில் காய்கறிகளை விற்று வந்தார். இது பற்றிய தகவல்கள் ஊடகம், சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், சமூக நலத்துறையின் கீழ், செயல்படும் மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சமூகப் பணியாளர் அருள்குமார், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜா ஆகியோர் முருகேசுவரியின் வீட்டுக்குச் சென்று விசாரித்தனர்.

அவர்களின் வறுமை நிலையைக் கருத்தில் கொண்டு, அரசு காப்பகத்தில் சேர்த்து, அரசு செலவில் படிக்க, வைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.

மேலும், அவர்கள் கூறும்போது, ‘‘தாயை இழந்த நிலையில், தந்தையும் இன்றி பாட்டியின் அரவணைப்பில் வளரும் முருகேசுவரி நல்ல மதிப்பெண் எடுத்துள்ளார். வறுமையால் காய்கறி விற்கும் அளவுக்கு தள்ளப்பட்டதால் முருகேசுவரி, அவரது தம்பி கல்வியைத் தொடர ஏற்பாடு செய்யப்படும் என, அவர்களிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஒப்புதலைப் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x