Published : 22 Jun 2020 19:56 pm

Updated : 22 Jun 2020 19:56 pm

 

Published : 22 Jun 2020 07:56 PM
Last Updated : 22 Jun 2020 07:56 PM

கடவுளுக்குத்தான் தெரியும் என முதல்வர் ஏன் சொன்னார்?- அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

why-did-the-chief-minister-say-that-god-knows-minister-vijayabaskar-explained

சென்னை

கரோனா தொற்று எப்போது முற்றிலும் ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என முதல்வர் பழனிசாமி ஏன் அப்படிச்சொன்னார் என்பது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் காணொலி மூலம் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர் தெரிவித்ததாவது:

“அதிகமான அளவு ஆய்வு செய்யும் மாநிலமாக தமிழகம் உள்ளது. அதிக அளவில் டிஸ்சார்ஜ் செய்யப்படும் மாநிலமும் தமிழகம்தான். இது உலகளாவிய தொற்றுநோய். மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. மருந்தே இல்லாத இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களைச் சிகிச்சை அளித்து குணப்படுத்தி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 34,112 ஆகும்.

இன்று மட்டும் 1,378 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை 55 சதவீதமாக உள்ளது. இன்று உலக அளவில் பலரும் பாராட்டுகிறார்கள். ஐசிஎம்ஆர், உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட இன்னும் பல நிறுவனங்கள் நம்மைப் பாராட்டியுள்ளன.

பொதுமக்களுக்குப் பதற்றம் வேண்டாம். ஆனால், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஒவ்வொருவரின் உயிரும் முக்கியம் என முதல்வர் சொல்கிறார். அதற்காகத் தொடர்ந்து அல்லும் பகலும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதை உணர்ந்து பொதுமக்கள் அரசோடு ஒத்துழைக்க வேண்டும்.

உலகில் மழை, வெள்ளம், சுனாமி, பூகம்பம் போன்ற பேரிடர்கள் வந்துவிட்டுப் போய்விடும். ஆனால், இன்று ஏற்பட்டுள்ள பேரிடர் மருத்துவ அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தியுள்ளது. இது எப்போது போகும் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கண்ணுக்குத் தெரியாத கிருமியால் ஏற்படும் பேரிடர். இந்த இயற்கைப் பேரிடர் எப்போது ஒழியும், எப்போது போகும் எனக் கணிக்க முடியாத நிலையில் உலக அறிஞர்கள் உள்ளனர். இந்த சூழ்நிலையில் தமிழக அரசு அதிக அளவில் சோதனை, அதிக அளவில் கண்டறிவது, சிகிச்சை, குணப்படுத்துவது எனப் பல பணிகள் செய்து வருகிறது. பலமுனைத் தாக்குதலைச் சமாளித்து எதிர்கொண்டு வருகிறது தமிழக அரசு.

இதை முடிவுக்குக் கொண்டு வரும் காலநிலையைக் கணிக்க முடியவில்லை. அதனால்தான் முதல்வர் ஆய்வு நடத்திய போது யதார்த்தமாக ஒரு பத்திரிகையாளர், 'இந்தக் கரோனா தொற்று எப்போது ஒழியும், எப்படித் தீர்வு வரும்' எனக் கேட்டார். நமக்கெல்லாம் தெரியும். முதல்வர் தீவிர தெய்வ பக்தி உள்ளவர்.

யதார்த்தமாகக் கேட்ட அந்தக் கேள்விக்கு கடவுள் நம்பிக்கை உள்ள யாரும் சாதாரணமாகச் சொல்வது போல் கடவுளுக்குத்தான் தெரியும் என்று சொன்னார். அப்படிச் சொன்னதில் என்ன பிரச்சினை உள்ளது. கடவுள் என்று சொன்னால் ஸ்டாலினுக்கு ஏன் இவ்வளவு பிரச்சினை?

இந்தச் சூழ்நிலையிலும் அரசின் மீது அடிப்படை ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை வைக்க வேண்டாம். ஆக்கபூர்வமான எந்த வழிமுறைகள், யோசனைகள், கண்டுபிடிப்புகளைச் சொல்லுங்கள். ஏற்றுக்கொள்ள அரசு தயாராக உள்ளது. ஆனால், ஆதாரமின்றி அரசின் மீது குற்றம் சாட்டுவது ஏற்புடையதல்ல.

சென்னையைப் பொறுத்தவரை முதல்வர் முழு ஊரடங்கை ஏற்படுத்தியுள்ளார். நோய்த்தொற்று இரட்டிப்பாக அதிகரிக்கும் விஷயம் ஒருவாரத்தில் இரட்டிப்பாகிறதா, 12 நாளில் இரட்டிப்பாகிறதா, 15 நாளில் இரட்டிப்பாகிறதா? என்று ஆய்வு செய்தோம். அப்படிப் பார்த்தால் 15 நாட்களுக்கு மேலாக 16 நாட்களில் இரட்டிப்பாகும் சூழல் உள்ளதால் ஒரு சரியான திட்டமிடலுடன் தமிழக அரசு செயல்படுகிறது.

அதிகமான சோதனை, ஆரம்ப நிலையில் நோயைக் கண்டறிதல், அதன் மூலம் உயர்வான சிகிச்சை கொடுப்பது என சரியான அரசு முறையில் சென்றுகொண்டிருப்பதை அனைவரும் பார்த்துப் பாராட்டுகின்றனர்.

16 நாளில் இரட்டிப்பாகுவது மூலம் நாம் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். சென்னையில் தற்போது நடமாடும் வாகனங்கள் மூலம் 530 முகாம்களை நடத்தி வீடுதோறும் கதவைத் தட்டி, பரிசோதனைக்கு அழைக்கிறோம். இதன் மூலம் தினம் 30 ஆயிரம் பேரைப் பரிசோதனைக்கு ஆட்படுத்துகிறோம்.

இதனால் நோய் பரவும் வேகத்தைக் குறைத்து வருகிறோம். 14,814 மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக ஊழியர்கள், மருத்துவப் பணியாளர்களைப் பணியமர்த்தியுள்ளோம். சென்னையில் அரசு மருத்துவமனையில் 5,000 படுக்கை வசதிகள் உள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில் கோவிட் சென்டர் என 17,500 படுக்கைகள், தமிழகம் முழுவதும் 75,000 படுக்கைகள் தயார் நிலையில் ஆக்ஸிஜன் டேங்குடன் வைக்கப்பட்டுள்ளன. இதற்காக 71 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்கான வேலை நடக்கிறது.

உலக அளவில் சிகிச்சை தர நிர்ணயப்படி பிளாஸ்மா சிகிச்சையில் வெற்றி பெற்றுள்ளோம். உயிர்காக்கும் மருந்துகள், வீரியமிக்க மருந்துகள் மாவட்ட அளவிலான மருத்துவமனைகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. முதல்வருக்கே டெஸ்ட் எடுக்கும் நிலையில் அவருக்கு இன்று எடுக்கப்பட்ட சோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது. எந்தத் தகவலையும் அரசு மறைக்கவில்லை. வெளிப்படையாக இருக்கிறோம்.

உயிர்களைக் காக்கும் பணியில் ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் கரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு நோய்த்தொற்று வரும் எனத் தெரிந்தும் மக்களுக்காகக் களப்பணியாற்றினார். இதேபோன்று காவல் அதிகாரிகள், மருத்துவப் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். ஆகவே பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம். ஆனால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

எச்சரிக்கை என்றால் முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியைப் பராமரித்தல், கை கழுவுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் ஆகும். இதன் மூலம் நாம் வெற்றிகரமாக கரோனாவை எதிர்கொண்டு வெல்வோம்”.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Why didChief Minister sayThat God knows?Minister Vijayabaskar explainedகடவுளுக்குத்தான் தெரியும்முதல்வர்ஏன் சொன்னார்?அமைச்சர்விஜயபாஸ்கர்விளக்கம்கரோனாகொரோனாCorona tnCorona virusChennai news

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author