Published : 22 Jun 2020 06:00 PM
Last Updated : 22 Jun 2020 06:00 PM

கரோனா நிவாரண வடிவில் வந்த விடியல்!- புதுப்பிக்கப்படும் கோவை பழங்குடியினர் வீடுகள்

கரோனா ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடிகளுக்கு இடையே, சில நல்ல விஷயங்களும் நடக்கவே செய்கின்றன. கோவை மாவட்டம் முனியப்பன் கோவில்பதியில், பல்வேறு துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் பழங்குடி மக்களுக்கு, நீண்ட காலத்துக்குப் பிறகு அரசின் உதவிகள் சென்று சேர்ந்திருப்பது அவற்றில் ஒன்று.

கோவை க.க.சாவடி அருகே இருக்கிறது ரொட்டிக்கவுண்டனூர் முனியப்பன் கோவில்பதி. இங்கு மொத்தம் 56 வீடுகள். ஒரு பக்கம் அத்தனையும் குடிசைகள். இன்னொரு பக்கம் அரைகுறையாய்க் கட்டப்படாமல் நிற்கும் சில செங்கல் சுவர் கட்டிடங்கள். "பசுமை வீடுகள் திட்டத்தில் இதை கட்டித் தர்றோம்னு சொன்னாங்க. கடனை உடனை வாங்கிக் கொடுத்தோம். மண்ணு, கல்லு சுமந்தும் கொடுத்தோம். கட்டுப்படியாகலன்னு கட்டினவங்க போயிட்டாங்க. வருஷக்கணக்குல இது அப்படியே கிடக்குது" என்று இங்கு வசிக்கும் பழங்குடி மக்கள் வருத்தத்தில் இருந்தார்கள்.

வசிப்பிடத்துக்கும் போராட்டம்
இது தொடர்பாக, ‘பரிதவிக்கும் பழங்குடி மாணவர்கள்: சாதிச் சான்றிதழ் கிடைக்காததால் அவதி’ என்ற தலைப்பில் கட்டுரையையும் 'இந்து தமிழ் திசை’யில் வெளியிட்டிருந்தோம். இங்குள்ளவர்கள் மலசர் பழங்குடியினர். ஒரு காலத்தில் கோவை மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தோட்டங்காடுகளில் பண்ணைக் கூலிகளாக வாழ்ந்தவர்கள். தங்களுக்கு என்று நிலமோ, குடிசையோ இல்லாத நிலையில் சில குடும்பங்கள் தோட்டங்காடுகளிலிருந்து விரட்டப்பட்டார்கள்.

அப்படி வெளியில் வந்தவர்கள் ஆங்காங்கே குடிசை போட்டுத் தங்கினர். தங்கள் நிலை குறித்து அரசிடம் முறையிட, 40 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்காக மாரிமலசன் என்பவர் பெயரில் 2 ஏக்கர் நிலத்தை ஒதுக்கித் தந்தது அரசு. அதை அவர் 59 பேருக்குப் பிரித்துக் கொடுக்க, அவர்கள் முனியப்பன் கோவில்பதி என்ற பெயர் வைத்து குடிசை போட்டு வாழ்ந்துள்ளார்கள்.

எம்எல்ஏ, எம்.பி., மாவட்ட ஆட்சியர், உள்ளூர் அதிகாரிகள் என பலரிடம் முறையிட்ட பின்னர் இப்பகுதியில் தெருவிளக்கு வந்தது. எனினும், வீடுகளுக்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை. சில பேருக்கு மட்டும் ரேஷன் கார்டு கிடைத்துள்ளது. 36 பேருக்கு மட்டும் ஆதார் கார்டு வந்துள்ளது.

சாதிச் சான்றிதழ் இல்லை
இவை எல்லாவற்றையும்விட கொடுமை. இவர்களுக்குச் சாதிச் சான்றிதழ் கொடுக்கப்படவே இல்லை என்பதுதான். மலை மலசர் என்று ஒரு சாதியே கிடையாது; அதிலும் பழங்குடிப் பிரிவில் அது இல்லவே இல்லை என்று சொல்லிவிட்டனர் அதிகாரிகள். அதனால் பள்ளிக்கூடம் போகும் (இங்கிருந்து 2 கிலோ மீட்டர்) குழந்தைகள் 9-ம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

இவர்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவும், சாதிச் சான்றிதழ் பெற்றுத்தரவும் இப்பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியினர் போராடி வந்தனர். இதைத்தான் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். எனினும், இம்மக்களுக்குப் பெரிய உதவிகள் கிடைத்து விடவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் கரோனா நிவாரண உதவிகள் செய்ய வந்த அதிகாரிகள், தன்னார்வலர்கள் மூலம் இம்மக்களுக்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறது. இங்கு வசிக்கும் மக்களின் நிலையைப் பார்த்து பதறிய தன்னார்வலர்கள் இதுகுறித்து அதிகாரிகளிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளனர்.

குறிப்பாக, இங்குள்ள ஒரு குடிசையில் மின்வசதி எதுவும் இல்லாமல் வசிக்கும் சங்கவி என்ற பெண் 10-ம் வகுப்பில் 447 மதிப்பெண்ணும், 12-ம் வகுப்பில் 874 மதிப்பெண்ணும் பெற்றவர். எனினும், 2017-18-ம் கல்வி ஆண்டில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு எழுதியபோது, கட் –ஆஃப் மதிப்பெண் பற்றாக்குறையால் மருத்துவ சீட் கிடைக்காமல் போய்விட்டது. அதற்குக் காரணமே சாதிச் சான்றிதழ் இல்லாததுதான் என்று தெரியவந்தது. “நான் மறுபடியும் நீட் எழுதணும்; மருத்துவப் படிப்பு படிக்கணும்” என்று அந்த மாணவி சொன்னது ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவலான செய்தியானது.

தீர்வு கிடைத்தது
இந்தச் செய்திகள் வெளியான சமயத்தில், சங்கவியின் தந்தை முனியப்பன் திடீரென்று மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அம்மாணவிக்கு உதவப் பலரும் முன்வந்தனர். தாசில்தார் முதற்கொண்டு உள்ளூர் அலுவலர்கள் வரை இந்தக் காலனிக்கே வந்துவிட்டனர். சங்கவிக்கு கையோடு சாதிச் சான்றிதழ் கொடுத்ததோடு, யாருக்கெல்லாம் சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு வேண்டுமோ அதையெல்லாம் இரவு பகலாக இங்கே வந்து விசாரித்து எழுதிச் சென்றுள்ளனர்.

தவிர இச்செய்தியைக் கேள்விப்பட்ட ரோட்டரி கிளப் மற்றும் தன்னார்வலர்கள் இங்கு வசிக்கும் மக்களுக்கு உதவ முன் வந்துள்ளனர். வசிக்க வீடு இல்லாமல், அக்கம்பக்கம் உள்ள தோட்டங்காடுகளில் குடியிருக்கும் மலைமலசர் குடும்பங்களும் இங்கே தனக்கான இடத்தில் குடிசை போட்டுக் குடியிருக்க ஏற்பாடு நடந்துள்ளது. அதன்படி தற்போது இங்கே 29 பேருக்குச் சாதிச் சான்றிதழ்கள், ரேஷன் கார்டுகள், 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆதார் கார்டுகள், 22 பேருக்கு புதுப் பட்டாக்கள் என 81 குடும்பங்களுக்கான தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சங்கவியிடம் பேசினேன். “நான் எட்டாம் வகுப்பு படித்த காலம் முதல் அப்பாவும், நானும் சாதிச் சான்றிதழுக்கு அலையாத இடமில்லை. எந்தக் காரியமும் நடக்கலை. எப்படியாவது மருத்துவம் படிக்கணும்னுதான் பிளஸ் 2-வில் உயிரியியல் பாடம் எடுத்துப் படிச்சேன். நீட் தேர்வின்போது, ரத்த சோகை வந்து பாடாய்ப் பட்டுட்டேன். அதோட பரீட்சைக்குப் போனதுலதான் ‘கட் ஆஃப்ல 5 மதிப்பெண் குறைஞ்சுருச்சு. சரியான மதிப்பெண் எடுத்திருந்தாலும் சாதிச் சான்றிதழ் இல்லாததால் அதுவும் பயன்பட்டிருக்காது.

மே 3-ம் தேதி நிவாரணப் பொருட்கள் கொடுக்க தன்னார்வலர்களும் அதிகாரிகளும் வந்தாங்க. அப்படி வந்தவங்கதான் என்னைப் பார்த்துட்டு செய்தி எடுத்துட்டும் போனாங்க. அது டிவியில வந்தப்ப மே 10-ம் தேதி எங்கப்பா திடீர்னு இறந்துட்டாரு. ‘நான் வீட்ல ஒரே பொண்ணு. அம்மா உடம்புக்கு முடியாம வீட்ல இருக்காங்க. கூலி வேலையில இருந்த அப்பாவும் போயிட்டார். நிராதரவா நிற்கிற நான் இனி மருத்துவப் படிக்க முடியுமா? சாதிச் சான்றிதழ் கிடைக்குமா?’ன்னு என் பேட்டி வந்தவுடனேதான் எல்லாம் மனசு எறங்கிட்டாங்க. ஒருத்தர் என் படிப்புச் செலவை முழுசா ஏத்துக்கிறேன்னாரு. சரிஞ்சு கிடந்த எங்க குடிசையைப் பார்த்த ரோட்டரி கிளப்காரங்க வீடு கட்டித்தர்றதா அந்தச் செலவை ஏத்து அந்த வேலையும் தொடங்கிட்டாங்க.

மே 17-ம் தேதி நேர்லயே வந்த தாசில்தார், மணியக்காரர் எல்லாம் எனக்கு சாதிச் சான்றிதழ் கொடுத்தாங்க. அடுத்த நீட் தேர்வுக்கு முன்னாடி ஒரு கோச்சிங் சென்டருக்கு போகச் சொல்லி இன்னொருத்தர் ஏற்பாடு செஞ்சிருக்கார். அதுக்கும் தயாராயிட்டிருக்கேன்” என்றார் சங்கவி.

இந்த மக்களுக்காக நீண்ட காலமாகப் போராடி வரும் மார்க்சிஸ்ட் பிரமுகர் சண்முகம் கூறும்போது, “கரோனா வரும். அதற்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும். அதில் இந்தப் பிரச்சினை இந்த அளவு கவனிக்கப்படும்னு நாங்க எதிர்பார்க்கவேயில்லை. இங்கே சரிஞ்சு, இடிஞ்சு போய்க் கிடக்கிற குடிசைகளையெல்லாம் மாற்றித் தர்ற வேலைகள்ல ரோட்டரி கிளப்காரங்க ஈடுபட்டிருக்காங்க.

ஆனா, அவங்க ஒரு குறிப்பிட்ட தொகைதான் இதுக்காக ஒதுக்குறாங்க. அதுல கான்கிரீட் வீடு கட்ட முடியாது. மின்வசதி தர முடியாது. இந்த வீடும் தற்காலிகமானதாக இல்லாமல் இருக்க அரசு உதவணும். அதற்காகக் குறைந்தபட்சம் ஒரு வீட்டிற்கு ரூ.4 லட்சம் ஒதுக்கீடு செய்யணும். அதைத்தான் நாங்கள் இப்போது அதிகாரிகளிடம் கோரிக்கையாக வைத்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x