Last Updated : 22 Jun, 2020 05:38 PM

 

Published : 22 Jun 2020 05:38 PM
Last Updated : 22 Jun 2020 05:38 PM

கிரண்பேடி பொறுப்பேற்றது முதல் பல கோடிகளில் உயர்ந்த ஆளுநர் மாளிகை செலவு: ஆர்டிஐயில் விவரங்களைப் பெற்ற அமைச்சர்

கிரண்பேடி துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றது முதல் ஆளுநர் மாளிகை செலவு கடுமையாக உயர்ந்துள்ளது. பொறுப்பேற்ற ஆண்டுக்கு முன்பு இருந்ததை விட இரு மடங்கு செலவு கடந்த இரு ஆண்டுகளாக செய்யப்பட்டு வருவதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பெற்றுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் ஆந்திரத்துக்கு அருகேயுள்ள ஏனாம் பிராந்தியத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் கொடுக்கவில்லை என அத்தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றம்சாட்டி இருந்தார். இதனால் துணைநிலை ஆளுநருக்கும், அமைச்சருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. மேலும், ஏனாமில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வுக்குச் செல்லும்போது கருப்பு பலூன்களை பறக்கவிட்டு எதிர்ப்பும் தெரிவித்தார்.

இதற்கிடையே ஏனாம் வளர்ச்சித் திட்டங்களுக்கு துணைநிலை ஆளுநர் அனுமதி கொடுக்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியிருந்தார். இதையடுத்து, முதல்வர் நாராயணசாமி அவரைச் சமாதானம் செய்ததால் ராஜினாமா முடிவைக் கைவிட்டார். இதற்கிடையே புதுச்சேரியில் நிதி நெருக்கடி ஏற்படாமல் இருக்க சிக்கன நடவடிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தி இருந்தார்.

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்: கோப்புப்படம்

ஏற்கெனவே இருந்த ஆளுநர்கள் அதிகமாக செலவு செய்யவில்லை. ஆனால், கிரண்பேடி வந்த பிறகு ராஜ்நிவாஸின் செலவு அதிகரித்துள்ளதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கடந்த மே 8-ம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் புதுச்சேரி ஆளுநர் மாளிகை ஆண்டுதோறும் செலவிடப்படும் பட்ஜெட் தொகை விவரத்தை கோரி தற்போது விவரங்களைப் பெற்றுள்ளார்.

அதன்படி, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கிடைத்த தகவல் விவரம்:

2010-11-ல் ரூ.3.09 கோடியும், 2011-12-ல் ரூ. 2.91 கோடியும், 2012-13-ல் 3.82 கோடியும், 2013-14-ல் ரூ.3.50 கோடியும், 2014- 15-ல் ரூ.3.55 கோடியும், 2015-16-ல் ரூ.3.27 கோடியும், 2016-17-ல் ரூ.4.07 கோடியும், 2017-18-ல் ரூ.4.87 கோடியும், 2018-19-ல் ரூ.6.04 கோடியும் 2019-20-ல் ரூ.6.19 கோடியும் செலவிடப்பட்டுள்ளது என்று விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமைச்சர் தரப்பில் கூறுகையில், "கடந்த 2009 முதல் 2013 ஜூலை வரை ஆளுநராக இக்பால் சிங்கும், 2013 ஜூலை முதல் 2014 ஜூலை வரை ஆளுநராக வீரேந்திர கட்டாரியாவும் 2014 ஜூலை முதல் 2016 மே மாதம் வரை ஆளுநராக அஜய்குமார் சிங்கும் இருந்தார்கள். கிரண்பேடி கடந்த 29.5.2016-ல் ஆளுநராகப் பொறுப்பேற்றார்.

கிரண்பேடி பொறுப்பேற்பதற்கு முன்பு ரூ.3 கோடிக்குள் இருந்த ஆளுநர் மாளிகை செலவானது அவர் பொறுப்பேற்ற பிறகு கடுமையாக அதிகரித்துள்ளது. அவர் பொறுப்பேற்றதற்கு முன்பு இருந்ததை விட கடந்த இரு ஆண்டுகளாக இரு மடங்காக செலவிடப்படுகிறது. அதாவது, அவர் பொறுப்பேற்கும் முன்பு ரூ.3 கோடி வரை இருந்த செலவு தற்போது ரூ.6 கோடியைத் தாண்டிச் செல்கிறது" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x