கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கரோனா தொற்று: தூத்துக்குடியில் மீண்டும் கடுமையான ஊரடங்கா?- மாவட்ட நிர்வாகம் தீவிர பரிசீலனை

கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கரோனா தொற்று: தூத்துக்குடியில் மீண்டும் கடுமையான ஊரடங்கா?- மாவட்ட நிர்வாகம் தீவிர பரிசீலனை
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் ஊரடங்கு தளர்வுகளை ரத்து செய்துவிட்டு, மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று உச்சத்தை தொட்டு வருகிறது. மாவட்டத்தில் நேற்று வரை 577 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

மாவட்டத்தில் நேற்று 40-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போதிலும் 2 பேர் மட்டுமே பட்டியலில் சேர்க்கப்பட்டனர். மீதமுள்ளோர் இன்றைய பட்டியலில் சேர்க்கப்பட்டனர். மேலும், இன்று ஒரே நாளில் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600-ஐ தாண்டியுள்ளது. இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாநகரின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கரோனா தொற்று பரவியுள்ளது. சென்னையில் இருந்து வருவோர் மற்றும் அவர்களுடன் தொடர்பு வைத்திருப்போருக்கு மட்டுமே கரோனா தொற்று ஏற்பட்டு வருவதாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. இருப்பினும் முதுநிலை மருத்துவ மாணவர்கள், செவிலியர், காவல் துறையினர், பழக்கடை உரிமையாளர், மின்சாதன கடை உரிமையாளர் என பலதரப்பினரையும் கரோனா தொற்று பாதித்து வருகிறது.

கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள கரோனா தொற்றின் வேகத்தை கண்டு மாவட்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கரோனாவை கட்டுப்படுத்த வேண்டுமானால் மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்த வேண்டியது அவசியம் என பலரும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, ஊரடங்கு தளர்வுகளை ரத்து செய்துவிட்டு, கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் சில நாட்களுக்கு அமல்படுத்துவது குறித்து தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, தற்போதுள்ள சூழ்நிலையில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு ஒன்று தான் வழி. நாளை மறுநாள் (ஜூலை 24) தமிழக முதல்வர் பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

அப்போது இது தொடர்பாக பரிசீலிக்கப்படும். அதற்கு பிறகே கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in