மீண்டும் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்துக்கு மாறிய காய்கறி மார்க்கெட்

புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்ட காய்கறி மார்க்கெட்
புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்ட காய்கறி மார்க்கெட்
Updated on
1 min read

தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாததால், புதுச்சேரியில் காய்கறி மார்க்கெட் மீண்டும் புதிய பேருந்து நிலையத்துக்கு இன்று மாற்றப்பட்டது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரியில் குபேர் பெரிய மார்க்கெட் மூடப்பட்டு காய்கறிக் கடைகள் புதிய பேருந்து நிலைய வளாகத்துக்குள் மாற்றப்பட்டன. இடவசதி போதிய அளவு இருப்பதால் தாராளமாக தனிமனித இடைவெளியுடன் மக்கள் காய்கறிகளை வாங்கி வந்தனர். இச்சூழலில், பேருந்துப் போக்குவரத்து தொடங்கியுள்ளதால் காய்கறிச் சந்தையை குபேர் பெரிய மார்க்கெட்டுக்கு மாற்றி ஆட்சியர் அருண் உத்தரவிட்டார்.

அதன்படி, 63 நாட்களுக்குப் பிறகு பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த காய்கறிக் கடைகள் குபேர் பெரிய மார்க்கெட்டுக்கு மாற்றப்பட்டன. ஆனால், இங்கு பெரிய மார்க்கெட்டில் போதிய இடைவெளி இல்லை. மொத்தம் 450 கடைகள் உள்ளன. மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதுடன் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியவில்லை. இதையடுத்து, ஏஎப்டி திடல், அண்ணா திடல், பழைய சிறைச்சாலை வளாகத்தில் காய்கறி மார்க்கெட்டைத் தற்காலிகமாக மாற்ற முடிவு எடுத்தனர். ஆனால், வியாபாரிகள் அதை ஏற்கவில்லை. மேற்கூரை இல்லை என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று காய்கறி மார்க்கெட், குபேர் பெரிய மார்க்கெட்டிலிருந்து மீண்டும் புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்ற முடிவானது. அதே நேரத்தில், இதர கடைகள் குபேர் மார்க்கெட்டிலும் தொடரும். இதையடுத்து, இன்று (ஜூன் 22) முதல் புதிய பேருந்து நிலையத்தில் காய்கறி மார்க்கெட் செயல்படத் தொடங்கியது.

தற்போது பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்படாததால் குறைந்த அளவில் உள்ள பேருந்துகள், அருகிலுள்ள பிஆர்டிசி வாகன நிறுத்தத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in