

மதுரையில் நாளை (ஜூன் 23-ம் தேதி) முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, முழு ஊரடங்கு தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நிலவிய நிலையில் குழப்பத்துக்கு அரசாணை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
குழப்பம் ஏன்?
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ‘கரோனா’ பரவல் உச்சமாக உள்ளது. அதனால், இந்த மாவட்டங்களில் தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் மதுரைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், கடந்த சில நாட்களாக மதுரையில் கரோனா பாதிப்பு அதிகரித்தது. கடந்த சில நாட்களாகவே மதுரையில் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என்று பரவலாகப் பேசப்பட்டது.
மதுரையில் நாளை 23-ம் தேதி நள்ளிரவு 12 முதல் முழுஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. மேலும், அதை உறுதிப்படுத்தும் வகையில் ‘வாட்ஸ் அப்’பில் தேதி அறிப்பிடப்படாத அரசாணை ஒன்றும் வைரலானது.
ஆரம்பத்தில் உறுதிப்படுத்தாத அரசு வட்டாரம்..
வாட்ஸ் அப்பில் வெளியான தகவலை இன்று மாலை 6 மணி வரை மாவட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. தகவலை மறுக்கவும், தெளிவுப்படுத்தவும் முன்வராததால் குழப்பமும், பதற்றமும் அடைந்த பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் ஒரே நேரத்தில் கடைகளில் குவிந்தனர்.
பொதுவாக முழு ஊரடங்கு அறிவிப்பதற்கு அரசு பொதுமக்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் கால அவகாசம் கொடுக்கும். ஆனால், மாவட்ட அதிகாரிகள் இன்று மாலை 5 மணி வரை மக்களுக்கு அதை தெளிவுப்படுத்த முன் வராததால் மக்கள் பதட்டத்துடன் மளிகைக் கடை முதல் மருந்துக் கடைகள் வரை முண்டியடித்து பொருட்கள், மருந்துகள் வாங்கினர். ஊரடங்கு இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியாமல் வழக்கமாக கூலி வேலைகளுக்குச் செல்லும் மக்கள், தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்வோர், பள்ளிகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள் குழப்பமடைந்தனர்.
நிதி நெருக்கடி காரணமா?
முழு ஊரடங்கு அறிவிக்கும்பட்சத்தில், பொதுமக்கள் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை பொறுமையுடன் வாங்குவதற்கு கால அவகாசத்தை அரச வழங்க வேண்டும்.
ஆனால், எந்த நடைமுறையும் பின்பற்றாமல் முழுஊரடங்கு அமுல்படுத்தப்பட உள்ளதா? என்று மாவட்ட நிர்வாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘சமூக வலைதளத்தில் வரும் அரசாணையில் தேதி இல்லை. அரசிடம் இருந்து இதுவரை முழு ஊரடங்கிற்கான எந்த அதிகாரபூர்வ தகவலும் வரவில்லை. தற்போது வரை முழுஊரடங்கு இல்லை, ’’ என்று மட்டும் தெரிவித்தனர்.
ஆனால், முழுஊரடங்கு போன்ற கடுமையான கட்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தைக் கொண்டு நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்தளாகக் கூறினர்,
ஏனென்றால் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தினால், மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகள், அதற்கான வழிகாட்டுதல், அரசு நிவாரணம் போன்றவற்றை செயல்படுத்த வேண்டும்.
ஆனால், அரசிடம் நிதியில்லாததாலும் ‘கரோனா’வை கட்டுப்படுத்த வேறு வழி தெரியாததாலும் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதனால், இந்த மாவட்டங்களில் நேரடியாக தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவிக்காமல் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களைக் கொண்டே முழு ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மதுரையில் இன்று அவசரமாக தொழில் வர்த்தக சங்க பிரதிநிதிகளும் கூடி ஆலோசனைக் கூட்டம் நடத்தி சமூகப்பரவலைத் தடுக்க அவர்களாகவே கடைகள் மதியம் 2 மணிக்கு மூடப்படும் என்று அறிவித்தனர். இந்த அறிவிப்பின் பின்னணியில் மாவட்ட நிர்வாகத்தின் அழுத்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
முற்றுப்புள்ளி வைத்த அரசாணை:
இத்தனை சர்ச்சைகளுக்கும் குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே வாட்ஸ் அப்பில் வெளியான தகவல் தற்போது அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.