

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 61 வயது முதியவர் இன்று உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று வரையில் 640 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 208 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த 17-ம் தேதி இம்மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த திருநெல்வேலி டவுனைச் சேர்ந்த 61 வயது முதியவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கெனவே கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 4 பேர் இங்கு மரணமடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாநகரில் பல்வேறு இடங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் டவுன் பகுதியில் கரோனா பாதிக்கப்பட்ட தெருக்களில் நுழையத் தடைவிதித்து தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் கெடுபிடி
கரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் இன்றுமுதல் செயல்படத் தொடங்கியது.
நீதிமன்றத்துக்கு வந்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் நீதிமன்ற வளாகத்தில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவத்துறை பணியாளர்களும், மருத்துவ மாணவர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் நீதிமன்ற வளாகத்தில் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டிருந்தது.
அதனுள் மனுக்களைப் போடும்படி அறிவுறுத்தப்பட்டது. நீதிமன்ற வளாகம் முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.