

காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவர்கள், மீன்களை தடையின்றி விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் சுமார் 3 மாதங்களுக்குப் பின்னர் இன்று (ஜூன் 22) மீன்பிடி தொழிலுக்குச் சென்றனர்.
கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாலும், பின்னர் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டதாலும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. நிகழாண்டு மீன்பிடி தடைக்கால நாட்கள் குறைக்கப்பட்டு முன்கூட்டியே முடிக்கப்பட்டது. ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது, மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்கப்பட்ட போதிலும், மீன்களை ஏற்றுமதி செய்யும் வகையில் வெளி மாநிலங்களிலிருந்து வாகனங்கள் வந்து செல்வதில் சிக்கல் நீடிப்பதால், தற்போதைக்கு மீன்பிடிக்கச் செல்வதில்லை என்று விசைப்படகு மீனவர்கள் தாங்களாகவே முடிவெடுத்து தொழிலுக்குச் செல்லாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், பொருளாதாரம் மற்றும் வாழ்வாதார நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் தொழிலுக்கு செல்வது என ஒரு சில நாட்களுக்கு முன்னர் மீனவர்கள் முடிவெடுத்தனர். அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு, மண்டபத்தூர், அக்கம்பேட்டை, பட்டினச்சேரி உள்ளிட்ட 11 கிராமங்களைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று (ஜூன் 22) அதிகாலை காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இது குறித்து மீனவர்கள் கூறும்போது, "இனிமேலும் பொருளாதார சிரமத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது என்பதால் 90 நாட்களுக்குப் பிறகு தொழிலுக்குச் செல்கிறோம். டீசல் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கடலுக்குள் செல்கிறோம். எந்த அளவில் மீன்கள் கிடைக்கும் என்பது தெரியாது. எனினும் பிடித்து வரப்படும் மீன்களை நல்ல விலையில் விற்பனை செய்யவும், ஏற்றுமதி செய்யவும் அரசு வழிவகை செய்து கொடுக்க வேண்டும்.
வெளி மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து மீன் வாங்க வரும் வாகனங்களை தடைகளின்றி, எவ்வித பிரச்சினையுமில்லாமல் மீன்பிடி துறைமுகத்துக்கு வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். எல்லோரும் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றிதான் மீன் விற்பனை செய்ய வேண்டும் என எங்கள் கிராம மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இதை பின்பற்றாவிட்டால் கிராமம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சொல்லியுள்ளோம்.
நோய் பரவலை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள மீன் வளத்துறை அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளிப்பதாகக் கூறியுள்ளனர். இவ்வளவு நாட்கள் கழித்து தொழிலுக்கு செல்கிறோம், கடவுள் புண்ணியத்தில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என தெரிவித்தனர்.