Published : 22 Jun 2020 04:24 PM
Last Updated : 22 Jun 2020 04:24 PM

ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய கட்டணங்கள் நிர்ணயிக்கக் கோரிய வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் 

தமிழகத்தில் உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்குப் புதிய கட்டணங்களை நிர்ணயிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்குக் கட்டணங்களை நிர்ணயிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து தமிழக உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்தது. இக்குழு, 2016-ம் ஆண்டு கல்லூரிகளின் செலவுக் கணக்கு விவரங்களைக் கேட்டு, கட்டணங்களை நிர்ணயித்தது. 2016-17 முதல் 2018-19 ஆம் ஆண்டு வரையிலான மூன்று கல்வியாண்டுகளுக்கு இந்தக் கட்டணங்கள் அமலில் இருந்தன.

2019 -20 முதல் 2021 -22 ஆம் கல்வியாண்டுகளுக்கான கட்டணங்களை நிர்ணயித்து கட்டண நிர்ணயக் குழு 2019 செப்டம்பர் 12-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. ஆனால், விதிகளைப் பின்பற்றி கட்டணங்கள் நிர்ணயிக்கப்படவில்லை எனக் கூறி, கட்டண நிர்ணயக் குழு உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரியும், தமிழ்நாடு சுயநிதிக் கல்வியியல் கல்லூரிகள் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் நடராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த மனுவில், “தமிழகத்தில் மொத்தமுள்ள 696 கல்லூரிகளில், 285 கல்லூரிகள் கட்டண விகிதங்களைச் சமர்ப்பித்ததன் அடிப்படையில், செலவுகள் குறித்த ஆவணங்களைச் சமர்ப்பித்த 85 கல்லூரிகளுக்கு, ஒரு மாணவருக்கு 42 ஆயிரத்து 500 ரூபாய் எனக் கட்டணம் நிர்ணயித்தது.

கட்டண நிர்ணயத்திற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்காத 200 கல்லூரிகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள 411 கல்லூரிகள் கட்டண விகிதங்களைச் சமர்ப்பிக்காததால், அவற்றுக்கு 22 ஆயிரத்து 500 ரூபாயும் கட்டணமாக நிர்ணயித்து கட்டண நிர்ணயக் குழு உத்தரவிட்டது.

அந்த உத்தரவில் கட்டண விகிதங்களை மாற்றியமைக்கக் கோரி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க கல்லூரிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டதன் அடிப்படையில், பல கல்லூரிகள் கட்டண விகிதத்தை மாற்றியமைக்கக் கோரி விண்ணப்பித்த நிலையில், கட்டண நிர்ணயக் குழு தலைவராக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி இறந்து விட்டதால், கல்லூரிகளின் கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. கல்லூரிகள் சங்கங்களின் சார்பில் வழக்கறிஞர் கண்ணன் ஆஜரானார்.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனோகரன், கட்டண நிர்ணயக் குழுவுக்கு தற்போது ஓய்வுபெற்ற (உயர் நீதிமன்ற) நீதிபதி வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளதாவும் எனவே இதுகுறித்து உரிய பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து ஜூன் 29-ம் தேதிக்கு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x