

தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு கரோனா பரவிவிட்டது என தமிழக அரசை தொடர்ந்து குறைகூறி தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதுடன், புதுச்சேரி மக்களையும் முதல்வர் நாராயணசாமி ஏமாற்றி வருகின்றார் என்று அதிமுக விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக, புதுச்சேரி மாநில சட்டப்பேரவை அதிமுக தலைவர் அன்பழகன் இன்று (ஜூன் 22) வெளியிட்டுள்ள அறிக்கை:
"முதல்வர் நாராயணசாமி ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு கரோனா பரவிவிட்டது என தமிழக அரசை தொடர்ந்து குறைகூறி தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதுடன், புதுச்சேரி மக்களையும் ஏமாற்றி வருகின்றார். தமிழகப் பகுதியில் இருந்து வரக்கூடிய சாலைகள் அனைத்தையும் சீல் வைத்த பின்னரும், தமிழகத்தில் இருந்து நோய்த் தொற்று வருகிறது என்ற இதே கதையை கூறி வருகின்றார். சுயசார்பு இல்லாமல் பால், காய்கறி மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் அண்டை மாநிலத்தை நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற குறை கூறுகிறோம் என்ற சிந்தனை கூட முதல்வருக்கு இல்லை.
ஒவ்வொரு மனிதனின் தும்மலின்போதும் கரோனா கிருமி அருகில் உள்ளவர்களுக்கு பரவும் என்பதை முன்னிட்டு மூடிய அறையில் குளிரூட்டியை (ஏசி) பயன்படுத்தி கூட்டங்கள் நடத்த வேண்டாம் என்று உலக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி கரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான ஆலோசனை கூட்டத்தை தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமல், குளிரூட்டி வசதியை பயன்படுத்தி, மூடிய அறையில் மூன்று மணி நேரம் நடத்தியுள்ளார். இக்கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். அதில் ஒருவருக்கு கரோனா தொற்று இருந்திருந்தால் கூட கரோனா தொற்று ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்களில் 50 சதவீதத்திற்கும் மேல் கரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பர்.
அதேபோன்று தனது கட்சித் தலைவர் ராகுல் பிறந்தநாளை நூற்றுக்கும் மேற்பட்டவர்களோடு முதல்வர் தனது கட்சி அலுவலகத்தில் கொண்டாடுகின்றார். தனிமனித இடைவெளியை பின்பற்றுவதில் மக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய முதல்வர் நாராயணசாமி அவ்வாறு செய்யாமல் நடப்பது தவறான ஒன்றாகும்.
இதுபோன்ற காலக்கட்டத்தில் மக்களோடு மக்களாக மக்களுக்கு சேவை செய்யும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்தையும் கேட்டு முடிவெடுப்பது என்பது நல்ல அரசுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். எனவே முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவை உறுப்பினர்களுடைய கருத்தினை கேட்க வேண்டும்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.