

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறவும், ஆட்கள் தேவைப்படும் நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்யவும் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தனி இணையதளத்தை தொடங்கியுள்ளது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறும் வகையிலும், தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான தகுதியான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளும் வகையிலும் மாவட்ட வேலைவாயப்பு அலுவலகங்களில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வந்தது. மேலும், முக்கிய நகரங்களில் அவ்வப்போது பெரிய அளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வந்தன.
இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்று வந்தனர். அதுபோல தனியார் நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான பணியாளர்கள், தொழிலாளர்களை எளிதாக தாங்களே நேரடியாக தேர்வு செய்து வந்தன. ஆனால், கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெறவும், தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவும் www.tnprivatejobs.tn.gov.in என்ற பிரத்யேக இணையதளத்தை தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை உருவாக்கியுள்ளது. தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள், இந்த இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து, தங்களது கல்வித்தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ப பணி வாய்ப்புகளை பெறலாம்.
அதுபோல தனியார் துறை சார்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலி பணியிடங்களை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அந்த பணிக்கு தகுதியான நபரை தேர்வு செய்து பணி நியமனம் செய்யலாம்.
வேலை அளிப்போர் மற்றும் வேலை நாடுநர்களுக்கு கட்டணம் இன்றி இந்த சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த இணையதளம் மூலம் இணையவழி நேர்காணல் மற்றும் இணையவழி பணி நியமனம் செய்யலாம். எனவே, இந்த சேவையை வேலைநாடுநர்களும், வேலை அளிப்போரும் பயன்படுத்தி கொள்ளுமாறு தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.