Published : 22 Jun 2020 03:17 PM
Last Updated : 22 Jun 2020 03:17 PM

சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 1.20 லட்சம் வீடுகள்; 4,500 தன்னார்வலர்கள் நியமனம்; மாநகராட்சி ஆணையர் பேட்டி

சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (ஜூன் 22) மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"சென்னை மாநகராட்சி முழுவதும் 500 முதல் 550 மருத்துவ முகாம்கள் தினந்தோறும் நடத்தப்படுகின்றன. 200 வார்டுகளில் குறைந்தபட்சம் 2 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. நேற்று முன் தினம் (ஜூன் 20) மட்டும் இதன் மூலம் 36 ஆயிரத்து 271 பேர் பலனடைந்திருக்கின்றனர். இந்த முகாம்கள் மூலம் அடிப்படைப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேவையானவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணிகளும் நடைபெறுகின்றன.

எந்தெந்தப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன என்பது இணையதளம், ட்விட்டர் வாயிலாகத் தெரிவிக்கப்படுகின்றன. மேலும், அந்தந்தப் பகுதிகளில் ஆட்டோக்கள் மூலமாகவும் அறிவிக்கிறோம்.

கிட்டத்தட்ட 18 வகையான வீடுகளைத் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்துகிறோம். சென்னை மாநகராட்சியில் இன்று வரை 1 லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வீடுகளுக்கு அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக, மாநகராட்சி சார்பில் தன்னார்வலர்கள் 4,500 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள், 200 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டுக்குள் உள்ள தெருக்களையும் பிரித்து, அதிகமானோர் வசிக்கக்கூடிய தெருக்களாக இருந்தால் 5 தெருக்களுக்கு ஒரு தன்னார்வலர், சிறிய தெருக்களாக இருந்தால் 10-15 தெருக்களுக்கு ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளைக் கண்காணிப்பர். அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வராதவாறு தேவையான உதவிகளைத் தன்னார்வலர்கள் மேற்கொள்வர்.

சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை 2 முதல் 2.50 லட்சமாக உயரும். இது ஒரு சுழற்சி முறையில் அமல்படுத்தப்படும். இதன் மூலம் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்".

இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x