Published : 22 Jun 2020 13:11 pm

Updated : 22 Jun 2020 13:12 pm

 

Published : 22 Jun 2020 01:11 PM
Last Updated : 22 Jun 2020 01:12 PM

மொத்தப் பழியையும் கடவுளின் மீது போட்டுவிட்டுத் தப்பிக்க நினைத்தால் மக்கள் மட்டுமல்ல; கடவுளும் மன்னிக்க மாட்டார்; முதல்வர் மீது தினகரன் விமர்சனம்

ttv-dhinakaran-slams-cm-palanisamy
முதல்வர் பழனிசாமி - டிடிவி தினகரன்: கோப்புப்படம்

சென்னை

மொத்தப் பழியையும் கடவுளின் மீது போட்டுவிட்டுத் தப்பிக்க நினைத்தால் மக்கள் மட்டுமல்ல கடவுளும் மன்னிக்க மாட்டார் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஜூன் 22) வெளியிட்ட அறிக்கை:

"சென்னைக்கு வெளியே உள்ள மாவட்டங்களிலும் திடீரென கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல், கடவுளின் மீது பழியைப் போட்டுவிட்டு தமிழக ஆட்சியாளர்கள் தப்பிக்க நினைப்பது நியாயமல்ல.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவரும் கரோனா நோய் தாக்குதல் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் தீவிரமடையத் தொடங்கியிருக்கிறது. திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, அரியலூர், கோவை என பெரும்பாலான மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை திடீரென உயர்ந்து வரும் நிலையில், வெளி மாவட்டங்களில் கரோனா தொற்று குறைவு என்று கூறியிருக்கும் முதல்வர் பழனிசாமி எந்த உலகத்தில் சஞ்சரிக்கிறார் என்று தெரியவில்லை.

இ-பாஸ், வாகனச் சோதனை, தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்வதாக ஆட்சியாளர்கள் தெரிவித்துவரும் நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை இப்படி அதிகரிக்கிறது வருகிறது. ஆனால், இதுபற்றிய கவலை ஆள்வோருக்கு இல்லை என்பதற்கு முதல்வரின் அலட்சியமான பேட்டியே உதாரணம். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு டெண்டர்களை விடுவதில் தமிழக அரசு காட்டும் ஆர்வத்திலும் அக்கறையிலும் கொஞ்சமாவது கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் காட்டியிருந்தால் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகி இருக்காது.

தங்களின் திறமையின்மையால் நாளுக்கு நாள் சூழல் மோசமாகி வருவதை மறைப்பதற்குத்தான் முதல்வர் தற்போது கடவுளின் மீது பழியைப் போட்டு தப்பிக்க நினைக்கிறார். 'ஒரே ஒருவர் கூட தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட மாட்டார்கள்' என்று சட்டப்பேரவையில் ஆவேசமாக வசனம் பேசியபோது முதல்வருக்குக் கடவுள் நினைவுக்கு வரவில்லையா? 'மூன்றே நாட்களில் கரோனா முற்றிலுமாக ஒழிக்கப்படும்' என்று இரண்டு மாதங்களுக்கு முன்பு அடித்துச் சொன்னபோது, தான் ஒரு மருத்துவர் இல்லை என்பது முதல்வர் பழனிசாமிக்குத் தெரியாதா? 'யார் சொல்வதையும் கேட்க மாட்டேன்; அனைத்தையும் நான் அறிவேன்' என எல்லோரையும் எடுத்தெறிந்து பேசிய போதெல்லாம், தான் ஒரு 'உலக மகா மருத்துவ நிபுணர்' என்று முதல்வர் நினைத்துக் கொண்டிருந்தாரா ?

இவ்வளவு நாட்களாக எதிர்க்கட்சியினர், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் சொன்ன கருத்துகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, இப்போது கரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்கி, பலி எண்ணிக்கை 757 ஆக உயர்ந்து, நாள்தோறும் உயிரிழப்போரின் அளவு அதிகரித்துக்கொண்டே வரும் நேரத்தில், மொத்தப் பழியையும் கடவுளின் மீது போட்டுவிட்டு தப்பிக்க நினைத்தால் மக்கள் மட்டுமல்ல; கடவுளும் இவர்களை மன்னிக்க மாட்டார்".

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்டிடிவி தினகரன்முதல்வர் எடப்பாடி பழனிசாமிதமிழக அரசுCorona virusTTV dhinakaranCM edappadi palanisamyTamilnadu governmentONE MINUTE NEWSPOLITICS

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author