

தஞ்சாவூர் அருகே நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டதால், அரசு மணல் குவாரியை ரத்து செய்ய வேண்டும் என கிராம மக்கள் இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் அருகே திருக்காட்டுப்பள்ளியை அடுத்த திருச்சென்னம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் தமிழக அரசு தற்போது மணல் குவாரியை அமைத்துள்ளது. இந்த குவாரியிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் அள்ளப்படுகிறது.
இதனால் திருச்சென்னம்பூண்டி சுற்றுவட்டார கிராம மக்கள் தங்களது பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் கூறி அரசு மணல் குவாரியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று (ஜூன் 22) பெருந்திரள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு, திருச்சென்னம்பூண்டி ஊராட்சி மன்றத் தலைவர் வடிவழகன் தலைமை வகித்தார். போராட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ எம்.ரெங்கசாமி, வழக்கறிஞர்கள் வெ.ஜீவக்குமார், மதி, பூதலூர் ஒன்றியக் குழுத்தலைவர் செல்லக்கண்ணு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலாளர் காந்தி மற்றும் அனைத்துக் கட்சியினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின்போது, "திருச்சென்னம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் மூன்று முறை மணல் குவாரிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் நாளுக்கு நாள் மண் வளமும், நீர் வளமும் குறைந்து கொண்டே வருகிறது. 30 அடியில் கிடைத்த தண்ணீர் தற்போது 100 அடிக்குக் கீழே சென்றுவிட்டது.
கொள்ளிடம் ஆற்றின் குடிநீர் ஆதாரங்களை நம்பியுள்ள 20 மாவட்டங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. ஆற்றில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதால் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இன்னும் கடைமடைப் பகுதிகளுக்குச் சென்று சேரவில்லை.
திருச்சென்னம்பூண்டியில் மணல் குவாரி அமைக்கக் கூடாது என உயர் நீதிமன்றத்தில் கிராம மக்கள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், அவசர அவசரமாக மணல் குவாரிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது ஏன்?
மணல் குவாரி தொடர்ந்து அமைவதால், அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்படுவதால், மணலின் தரம் குறைந்துள்ளது. எனவே தற்போது நான்காவது முறையாக அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரியை அரசு ரத்து செய்ய வேண்டும்" என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் திருச்சென்னம்பூண்டியில் இன்று ஏராளமான போலீஸார், வருவாய்த்துறையினர் குவிக்கப்பட்டனர். பொதுமக்களின் போராட்டம் காரணமாக இன்று அரசு மணல் குவாரி இயங்கவில்லை.