

சென்னை மடிப்பாக்கம் ஐயப்பா நகரில் வசிப்பவர் ரமேஷ் சங்கர். திரைப்படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். குறும்படங்களும் தயாரித்து வருகிறார். கணவனை பிரிந்து வாழும் துணை நடிகை சசிரேகா என்பவரை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சசிரேகாவுக்கு முதல் கணவர் மூலம் ரோஷன்(7) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் ரமேஷ் சங்கருக்கு இன்னொரு பெண்ணு டன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும் சசிரேகாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
இந்நிலையில் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் சசிரேகா ஒரு புகார் மனுவை கொடுத்தார். அந்த புகாரில், “குறும்படம் எடுப்பதாக கூறி ரமேஷ் சங்கர் என்னிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கினார். குரோம்பேட்டையை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்படவே அவரது நடவடிக்கைகளை கண்காணிக்க ஆரம்பித்தேன். அப்போது அவரது காரில் இருந்த பையில் பணக்கட்டுகளும், ஒரு துப்பாக்கியும் இருந்தது. இதுகுறித்து கேட்டபோது என்னைக் கொன்று விடுவதாக மிரட்டினார். இந்நிலையில் ரமேஷ் சங்கரும், அவரது காதலியும் சேர்ந்து எனது மகன் ரோஷனை கடத்தி வைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து எனது மகனை மீட்டுத் தர வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
இந்த புகாரின்பேரில் மடிப்பாக்கம் போலீஸார் ரமேஷ் சங்கரின் காதலியை பிடித்து விசாரித்தனர். “என்னிடம் இருந்தும் ரமேஷ் சங்கர் லட்சக்கணக்கில் பணம் வாங்கியிருக்கிறார். நானும் அவரைத்தான் தேடிவருகிறேன். ரோஷன் கடத்தல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது” என்று அப்போது அவர் கூறியுள்ளார்.
ரமேஷ்சங்கரின் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அவரை கண்டுபிடித்தால்தான் ரோஷன் எங்கிருக்கிறான் என்பது தெரியவரும் என்பதால் அவரைத் தேடும் பணியில் மடிப்பாக்கம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.