

கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்துவிட்டு முந்தைய பருவ மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிட வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஜூன் 22) தன் ட்விட்டர் பக்கத்தில், "சென்னையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்வது பற்றி தமிழக அரசு இன்னும் முடிவெடுக்காமல் இழுத்தடிப்பது சரியானது அல்ல.
ஏற்கெனவே இது தொடர்பாக மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையைச் சுட்டிக் காட்டிய பிறகும் தமிழக அரசு முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே மன அழுத்தத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.
எனவே, கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்துவிட்டு முந்தைய பருவ மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிட வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைப் போல இதிலும் கடைசி வரை அரசு குழப்பிக் கொண்டே இருக்காமல் விரைவாக முடிவெடுக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.