Published : 22 Jun 2020 07:33 AM
Last Updated : 22 Jun 2020 07:33 AM

கோயில் இருந்த இடத்தில் பள்ளிக்கூடம், கல்லறை கட்ட முடிவு?- சிவலிங்கத்தை மீட்டு வழிபடும் மக்கள்: கோட்டாட்சியர் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த திருக்கடையூர் அருகே அடியமங்கலத்தில் பூமியில் புதைந்த நிலையிலிருந்து மீட்டு மக்கள் வழிபட்டு வரும் சிவலிங்கம். (அடுத்தடுத்த படங்கள்) மீட்கப்பட்ட யோக நரசிம்மர், சூரியனார் சிலைகள்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் மயிலாடு துறையை அடுத்த திருக்கடையூர் அருகே கோயில் இருந்த இடத்தில் பள்ளிக்கூடம், கல்லறை கட்ட முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுவதை அடுத்து, பூமியில் புதைந்திருந்த சிவலிங்கத்தை மீட்ட கிராம மக்கள் தினமும் வழிபாடு செய்து வருகின்றனர். இதுகுறித்து கோட்டாட்சியர் தலைமையில் இன்று(ஜூன் 22) பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.

திருக்கடையூர் அருகே அடியமங்கலம் என்ற கிராமத்தில் ஐயனார் கோயில் உள்ளது. அதற்கு அருகே உள்ள நிலத்தில் ஒரு சிவலிங்கம் புதைந்த நிலையில் இருந்தது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இதைப்பார்த்த கிராம மக்கள் அப்பகுதியில் நிலத்தை தோண்டியபோது, கல் தூண்கள், கல்வெட்டுகள், சூரியன், யோக நரசிம்மர் சிலைகள் கிடைத் துள்ளன. மேலும் அங்கு கோயில் இருந்ததற்கான ஆதாரம் அந்த நிலத்துக்கான ஆவணத்திலேயே தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பிட்ட பகுதியில் அக ழாய்வு செய்தால், அங்கு பழங்கால கோயில் இருந்துள்ளது என்பது உலகுக்குத் தெரியவரும் என்று கூறும் கிராம மக்கள், சிவலிங்கம் கிடைத்த பகுதியை லிங்கத்தடி என்று அழைக்கின்றனர்.

இந்தப் பகுதியில் உள்ள ஐந்தரை ஏக்கர் நிலத்தை கடந்த சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் அதே ஊரை சேர்ந்த ராஜுலு என்பவரது குடும்பத்தினர், கிறிஸ் தவ சர்ச் நிர்வாகத்தினரிடம் விற்பனை செய்துள்ளனர். அப்போது, கோயிலை அகற்றக் கூடாது என்ற நிபந்தனையுடன் நிலத்தை விற்பனை செய்ததாகக் கூறப் படுகிறது.

இந்நிலையில், நிலத்தை வாங்கிய சர்ச் நிர்வாகம் அந்த இடத்தில் பள்ளிக்கூடம், கல்லறை அமைக்க உள்ளதாக கடந்த 2 ஆண்டுகளாக கூறப்படுவதை அடுத்து, மீட்கப்பட்ட சிவலிங்கம் உள்ள இடத்தில் கூரை அமைத்து, சிவாச்சாரியாரைக் கொண்டு மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். கோயிலை அப்புறப்படுத்த சர்ச் நிர்வாகத்தினர் திட்டமிடுவதாக தகவல் வெளியானதை அடுத்து, கோயிலை மீட்பதற்காக கிராம கமிட்டி அமைக்கப்பட்டது. இந்நிலையில் மக்களிடையே அமைதியை ஏற்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் தலைமையில் இன்று(ஜூன் 22) பேச்சு வார்த்தை நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து அடியமங்கலத்தை சேர்ந்த முத்தையா என்பவர் கூறியபோது, “அந்த நிலத்தில் சர்ச் நிர்வாகத்தினர் பள்ளிக்கூடம் கட்ட இருப்பதாகவும், மயிலாடுதுறை நகரத்தில் கல்லறை அமைக்க இடம் கிடைக்காததால் இங்கு கல்லறை அமைக்க உள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும், விவசாயம் செய்ய இருப்பதாகவும் சொல் கிறார்கள்” என்றார்.

ஆர்.எஸ்.எஸ். நாகை மண் டல செயலாளரும், சமூக ஆர்வல ருமான நாராயணன் கூறியபோது, “அடியமங்கலம் கிராமத்துக்கு சென்று பார்த்தோம். அந்த நிலத்தில் கோயில் இருந்ததற்கான ஆதாரத்தை திரட்டினோம். அந்த ஆவணங்களை கிராம கமிட்டி மூலமாக மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து விசாரித்து நியாயம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்” என்றார். இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கொள்ளிடம் சுவாமிநாதன் கூறியபோது, “இப்பிரச்சினை தொடர்பாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் தலைமையில் நாளை(இன்று) பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x