Last Updated : 22 Jun, 2020 07:30 AM

 

Published : 22 Jun 2020 07:30 AM
Last Updated : 22 Jun 2020 07:30 AM

5 டிஎம்சி-க்கு மேல் நீர் இருப்பு உள்ளதால் சென்னையில் டிசம்பர் வரை குடிநீர் தட்டுப்பாடு வராது

சென்னைக்கு குடிநீ்ர் வழங்கும் ஏரிகளில் 5 டிஎம்சி-க்கு மேல் நீர் இருப்பு உள்ளதால் வரும் டிசம்பர் வரை குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து குடிநீர் எடுத்து வரப்படுகிறது. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,257 மில்லியன் கனஅடி. தற்போது 5,197 மில்லியன் கனஅடி இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 23 மில்லியன் கனஅடிதான் நீர் இருப்பு இருந்தது.

ஆனால், இந்த ஆண்டு சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் 5 டிஎம்சி-க்கு மேல் நீர் இருப்பு உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால், வீராணம் ஏரியில் காவிரி நீர் நிரப்பப்படும். ஒரு டிஎம்சி தண்ணீரைக் கொண்டு சராசரியாக 40 நாட்களுக்கு சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். அதன்படி கணக்கிட்டால், வரும் டிசம்பர் வரை சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என்று சென்னைக் குடிநீர் வாரியம் தெரிவிக்கிறது.

இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரி கூறியதாவது:-

சென்னையில் தற்போது தினமும் 700 மில்லியன் லிட்டர் (7 கோடி லிட்டர்) குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குடிநீர் வழங்கும் ஏரிகளில் இருந்து 305 மில்லியன் லிட்டர், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து 180 மில்லியன் லிட்டர், நெய்வேலி சுரங்கம் மற்றும் வீராணம் ஏரியில் இருந்து 180 மில்லியன் லிட்டர், தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள விவசாயக் கிணறுகளில் இருந்து 35 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் 2 கட்டங்களாக ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நீர் திறந்துவிடப்படுகிறது.

இதுவரை இக்காலக்கட்டத்தில் 7 டிஎம்சி, 7.5 டிஎம்சி என்றுதான் தண்ணீர் வந்து சேர்ந்தது. முதன்முறையாக இந்த ஆண்டுதான் 8 டிஎம்சி முழுமையாக வந்து சேர்ந்துள்ளது. குடிநீர் ஏரிகளில் போதியளவு தண்ணீர் இருப்பு இருப்பதால் வரும் டிசம்பர் வரைசென்னை மாநகரில் தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x