

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
தமிழகத்தில் கரோனா பாதிப்புநாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்த இந்த மாவட்டங்களின் சில பகுதிகளில் ஜூன் 19-ம்தேதி முதல் 30-ம் தேதி வரை 12 நாட்களுக்கு அத்தியாவசிய தேவைகளுக்கான தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, அமலில் உள்ளது. இந்த 12 நாட்களில் 21, 28 ஆகிய தேதிகளில் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி நேற்று, சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பகுதிகளில் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதையொட்டி அனைத்து இடங்களிலும் காய்கறி, அரிசி மற்றும்மளிகைக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பால் விநியோகம் காலை 7 மணிக்குள் முடிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் வெளியில் சுற்றுவது நேற்று வெகுவாக குறைந்திருந்தது. விதிகளை மீறி சாலையில் சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. நேற்றுமுழு ஊரடங்கு மட்டுமல்லாது, வளைய சூரிய கிரகணமும்நிகழ்ந்ததால் பெரும்பாலான மக்கள் வீடுகளில் முடங்கினர். அதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
திருமழிசை காய்கறி சந்தை
எப்போதும் பரபரப்புடன் காணப்படும் திருமழிசை காய்கறி தற்காலிக சந்தை நேற்று செயல்படவில்லை. அதனால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்டதிருமுல்லைவாயல் பகுதியில் விதிகளை மீறி நேற்று திறக்கப்பட்ட ஆட்டு இறைச்சி கடைக்கு மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது. மேலும் வீடுகளில் விதிகளை மீறி கோழி இறைச்சி விற்பனை செய்த 6 வியாபாரிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னையில் நேற்று மட்டும் விதிகளை மீறிய 948 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.