

ரயில்வேயில் காலிப் பணியிடங்களுக்கு 1.26 கோடிக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில்,வாரியம் வெளியிட்டுள்ள உத்தரவால், தேர்வுகள் நடத்தப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 35,208 காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யகடந்த ஆண்டு ஏப்ரலில் ரயில்வே தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்வுகளுக்கு 1.26கோடிக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இருப்பினும் தேர்வுகள் நடத்தப்படவில்லை.
இதற்கிடையே, கரோனா பாதிப்பைத் தொடர்ந்து, ரயில்வேயில்பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, ரயில்வேயில்பாதுகாப்பு பிரிவைத் தவிர, மற்றபிரிவுகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதை பரிசீலிக்கவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு விண்ணப்பதாரர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேர்வுகள் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக டிஆர்இயு துணைப் பொதுச்செயலாளர் மனோகரன் கூறும்போது, ‘‘ரயில்வேயில் சிக்கனம் என்ற பெயரில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. ரயில்வேயை தனியார்மயமாக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமூக நலன்களுக்காக பல்வேறு சலுகைகள் வாயிலாக, மானியமாக ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம் கோடி ரயில்வே செலவிடுகிறது. இந்த செலவுகளை அரசு ஏற்றால் ரயில்வே லாபகரமான நிறுவனமாக மாறும். எனவே, ரயில்வேயில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும்’’ என்றனர்.