வானில் அபூர்வ வளைய சூரிய கிரகணம் நிகழ்ந்தது: பொதுமக்கள் உற்சாகமாக கண்டுகளிப்பு
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வானில் நிகழ்ந்த வளைய சூரிய கிரகணத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
சூரியனின் மையப் பகுதியை மட்டும் மறைத்து விளிம்பில் நெருப்பு வளையம்போல் ஒளி தெரிந்தால் அது வளைய சூரிய கிரகணமாகும். இதற்குமுன் இந்தியாவில் 2010, 2019-ம் ஆண்டுகளில் இந்த கிரகணம் தெரிந்தது.
அரிதான இந்த வளைய சூரியகிரகணம் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று காணப்பட்டது. இந்தியாவில் வளைய கிரகணம் காலை 10.12மணிக்கு தொடங்கியது. சூரியனைநிலவு படிப்படியாக மறைத்து மதியம் 12.10 மணிக்கு உச்சநிலை அடைந்தது. அப்போது சூரியனின்நடுப்பகுதி நிலவால் மறைக்கப்பட்டு அழகிய சிவப்பு நிற வளையம்போல் ஓரிரு நிமிடங்கள் காட்சியளித்தது. அதன்பின் கிரகணம் விலகத் தொடங்கி 2.02 மணிக்கு நிறைவு பெற்றது.
இந்த வளைய கிரகணம் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, உத்தராகண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் முழுமையாகவும், தமிழகத்தில் சென்னை, வேலூர், மதுரை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மற்றும் திருச்சியில் பகுதி அளவிலும் தெரிந்தது.
இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் எஸ்.சவுந்தரராஜ பெருமாள் கூறியதாவது:
வடமாநிலங்களில் முழுமையாக காணப்பட்ட வளைய கிரகணம் தமிழகத்தில் பகுதியாகவே தென்பட்டது. சென்னையில் சூரிய கிரகணம் உச்சநிலை அடைந்தபோது அதிகபட்சம் 34 சதவீதம் வரை தெரிந்தது. சில இடங்களில் மேகமூட்டமாக இருந்ததால் கிரகணத்தை தெளிவாகக் காணமுடியவில்லை.
மீண்டும் 2031-ம் ஆண்டில்...
இந்த ஆண்டின் மற்றொரு சூரியகிரகணம் டிசம்பர் 14-ம் தேதி நிகழும். தமிழகத்தில் வளைய சூரிய கிரகணம் 2031 மே 21-ம் தேதி தென்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வளைவு சூரிய கிரகணத்தைக் காண, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 25 மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கிரகணத்தை கண்டுகளித்தனர்.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீட்டின் மாடிகளில் இருந்தபடியே சூரிய கண்ணாடிகள் மூலமும், தொலைநோக்கி மூலம் வெண்திரையில் பிம்பத்தை விழச் செய்தும் கிரகணத்தைக் கண்டு ரசித்தனர்.
