

மாநகராட்சி களப் பணியாளர்கள் சிலர் கரோனா அறிகுறி யுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழக்கின்றனர். பிசிஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என முடிவு வருவதால், குடும்பத்தினருக்கு அரசின் நிவாரண நிதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.
சென்னையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன. நேற்று வரை பாதிப்பு எண்ணிக்கை 41 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் 600-ஐ தாண்டிவிட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல் துறையினர் என பல தரப்பினருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
மாநகராட்சியில் தற்போது தூய்மைப் பணியாளர்கள், மலேரியா பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள், புதிதாக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் என சுமார் 30 ஆயிரம் களப் பணியாளர்கள் உள்ளனர்.
மாநகராட்சிக்கு கூடுதல் களப் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். பிற உள்ளாட்சிகளில் இருந்து சென்னைக்கு வந்து பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் பட்டியலையும் அரசு கேட்டுள்ளதாக தெரிகிறது. பல உள்ளாட்சிகளில் உள்ள களப் பணியாளர்கள் யாரும் சென்னை வர விருப்பம் தெரிவிக்கவில்லை. சென்னையில் களப் பணியாளர் கள் அதிக அளவில் கரோனா வால் பாதிக்கப்படுவதும், உயிரிழப் புகள் ஏற்படுவதும், வெளி மாவட்ட உள்ளாட்சி களப் பணி யாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டு மின்றி, கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு, உயிரிழந்தவர்களில் சிலருக்கு பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என அறிவிக் கப்படுகிறது. அதனால் அவர் களின் குடும்பத்திருக்கு அரசின் கரோனா நிவாரண நிதி கிடைக் காத நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாகவும் மற்ற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள களப் பணி யாளர்கள் சென்னை வர விரும்ப வில்லை என கூறப்படுகிறது.
களப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று பரவி வருவது குறித்து சென்னை மாநகராட்சி செங்கொடி சங்க பொதுச் செயலர் பி.சீனிவாசலு கூறிய தாவது:
மாநகராட்சியில் எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, இதுவரை 60-க்கும் மேற்பட்ட களப் பணி யாளர்களுக்கு தொற்று ஏற்பட் டுள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ளனர். 3 மாத டேட்டா என்ட்ரி பணிக்கு வந்த பெண் உட்பட 3 பேர் கரோனா அறிகுறிகளுடன் உயி ரிழந்த நிலையில், அவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என வந்துள்ளது.
தேனாம்பேட்டை மண்டலம் 116-வது வார்டில் ஒப்பந்த மலே ரியா பணியாளராக பணிபுரிந்தவர் ஜெ.நந்தகுமார். இவர் கரோனா தொற்றால் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். முதலில் இவரது மகனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்த நிலையில், இவரது குடும்பத்தாருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள் ளப்பட்டதில், தொற்று இல்லை என முடிவு வந்தது. அடுத்த சில தினங் களில் சுவாச பிரச்சினை ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நந்தகுமார், சிகிச்சை பலனின்றி, மே 9-ம் தேதி உயிரிழந்தார். சடலத்தை இவரது குடும்பதாரிடம் மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைக்கவில்லை. கரோனா பாதித்தவர் சடலத்தை போன்றே, இவரது சடலமும் அடக்கம் செய்யப்பட்டது.
இவரது அண்ணன் ஜெ.சங்க ரும் மாநகராட்சியில் நிரந்தர களப் பணியாளராக இருந்தார். இவ ருக்கும் கரோனா அறிகுறி தெரிந்த நிலையில், முன்னெச்சரிக்கையாக தனியாரிடம் பரிசோதனை செய்து, கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டதற்கான சான்றை பெற்றுக் கொண்டு அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றார். அவரும் சிகிச்சை பலனின்றி ஜூன் 11-ம் தேதி உயிரிழந்தார்.
அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் முதுநிலை செவிலியர் ஒருவரும், சுவாசப் பிரச்சினையால் உயிரிழந்துள்ளார். அவருக்கும் கரோனா பரி சோதனையில், தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. ஆனால், செவிலியர் சங்கம் அரசுக்கு அழுத்தம் கொடுத்த நிலையில், அரசு அறிவித்த ரூ.50 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை உத்திரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று மாநகராட்சியில், கரோனா அறிகுறிகளுடன் சிகிச் சைக்கு அனுமதிக்கப்பட்டு உயி ரிழப்பவர்களுக்கு பரிசோதனை யில் தொற்று இல்லை என்று வந்தாலும், அவர்களுக்கும் அரசு அறிவித்த நிவாரணங்களை வழங்க வேண்டும். மாநகராட்சியில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் களப் பணியாளர்களுக்கு தின ஊதியமாக ரூ.379 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், 3 மாதங் களுக்கு நியமிக்கப்பட்டுள்ள களப் பணியாளர்களுக்கு தின ஊதியம் ரூ.500 வழங்கப்படுகிறது. மாநகராட்சி ஊழியர்களுக்கும் தினமும் ரூ.500 ஊதியம், பஞ்சப்படி ரூ.124.16 என தினமும் 624.16 ஊதியம் வழங்க கடந்த 2017-ல் அரசாணை பிறப்பித்தும் மாநகராட்சி நிறைவேற்றவில்லை. கரோனா பேரிடர் காலத்தில், களப்பணியால் தொற்று மற்றும் உயிரிழப்பை சந்திக்கும் ஊழியர்களுக்கு இப்போதாவது ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கரோனா ஒரு புதிய வைரஸ்
கரோனா ஒரு புதிய வைரஸ். அது எத்தகையது, அதன் குணா திசயம் என்ன, எப்படி பரவும், எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எதுவும் தெரியாது என்று முதல்வர் பழனிசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கூறுகின்றனர். இதற் கிடையில், வாஷிங்டனில் உள்ள அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி (American College of Cordiology) வெளியிட்டுள்ள கரோனா பரிசோதனை குறித்த ஆய்வறிக்கை ஒன்றில், ஆர்டி- பிசிஆர் (RT-PCR) முறையில் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளும்போது, தவறான முடிவுகள் அதிக அளவில் வருவதாக தெரிவித்துள்ளது. தொற்று ஏற்பட்ட நாள் முதல் 5 நாட்களுக்குள் 67 சதவீதமும், 8-வது நாளில் இருந்து 21 சதவீதமும் முடிவு தவறாக வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் சிலர் கூறும்போது, ‘‘டெங்கு, மலேரியா போன்ற நோய்களிலும் சில நேரங்களில் பரிசோதனை முடிவு தவறாக வருவதுண்டு. இருப்பினும், அதை அந்த நோயாகவே கருதி தடுப்பு நடவடிக்கைகளையும், சிகிச்சை யையும் மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனமும் மத்திய சுகாதார அமைச்சகமும் அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளன. இந்த முறை ‘கிளினிக்கல் டெங்கு’, ‘கிளினிக் கல் மலேரியா’ என அழைக்கப் படுகிறது. அதேபோன்று, இது புதிய வைரஸ் என்பதால், பிசிஆர் பரிசோதனையிலும் கரோனா பரிசோதனை முடிவுகள் தவறாக வரலாம். அதனால் அறிகுறிகள், வழங்கப்பட்ட சிகிச்சைகள் அடிப்படையில் ஒருவர் கரோனா வால் இறந்தாரா என முடிவு செய்யலாம்’’ என்றனர்.