உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாமதமாகும் அரசு வழக்கறிஞர்கள் நியமனம்: வழக்குகள் தேங்குவது அதிகரிப்பு

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாமதமாகும் அரசு வழக்கறிஞர்கள் நியமனம்: வழக்குகள் தேங்குவது அதிகரிப்பு
Updated on
1 min read

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தாமதமாகி வருவதால் வழக்குகள் தேங்குவது அதிகரித்து வருகிறது.

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தலைமை அரசு வழக்கறிஞர், தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞர், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் என 233 அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்கள் உள்ளன. இதில் 152 அரசு வழக்கறிஞர்கள் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். 81 அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்கள் பல மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளது.

மதுரை உட்பட 14 மாவட்டங்களை சேர்ந்த வழக்குகளை விசாரிக்கும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மொத்தம் 73 அரசு வழக்கறிஞர் பணியிடங்களில் உள்ளன. இதில் நீண்ட நாட்களாக 36 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்நிலையில் காலியாக உள்ள அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்களை நிரப்பவும், தற்போது பணியிலுள்ள அரசு வழக்கறிஞர்கள் பலரை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக புதியவர்களை நியமிக்கவும் பொதுத்துறை நடவடிக்கை எடுத்தது.

சென்னையில் 38, மதுரையில் 28 புதிய அரசு வழக்கறிஞர்களை தேர்வு செய்வது தொடர்பாக 2018 ஜூலை மாதம் அரசின் பொதுத்துறை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையடுத்து அரசு வழக்கறிஞர்கள் பணிக்கு தமிழகம் முழுவதும் இருந்து வழக்கறிஞர்கள் விண்ணப்பித்தனர். பல்வேறு கட்ட ஆய்வுக்கு பிறகு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அரசு வழக்கறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.

உயர் நீதிமன்ற கிளைக்கு 9 சிறப்பு வழக்கறிஞர்கள், 12 கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், 13 அரசு வழக்கறிஞர்கள் என 34 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பான இரு கட்ட போலீஸ் விசாரணை முடிந்து பல நாளாகிறது. இருப்பினும் இன்னும் பணி நியமனம் நடைபெறவில்லை.

இது குறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜூன் 28-க்கு பிறகு நேரடி விசாரணை தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது. அதற்குள் அரசு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும். தற்போது அரசு வழக்கறிஞர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் அரசுக்கு எதிரான வழக்குகள் தேங்கி வருகின்றன என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in