Published : 21 Jun 2020 08:56 PM
Last Updated : 21 Jun 2020 08:56 PM

கரோனா தொற்று தடுப்புப் பணி: அரசு ஊழியர்கள்-அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் மிக அதிக எண்ணிக்கையில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலியாகிக் கொண்டுள்ளனர். எனவே, அரசு ஊழியர்கள்- அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“தமிழ்நாட்டில் முதல்வர் அலுவலக ஊழியர்களும், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்களும் கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். தலைமைச் செயலகத்தில் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகளும், ஏராளமான ஊழியர்களும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தற்போது உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அரசு அலுவலங்களிலும்கூட ஊழியர்களும் அதிகாரிகளும் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் என்ற செய்தி வருகிறது. இந்நிலையில், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. இந்தப் பேரிடர் காலத்தில் தமிழக அரசின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசு ஊழியர்களின் ஆரோக்கியம் மிக மிக அவசியமானதாகும்.

எனவே, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டுமின்றி மற்ற மாவட்டத் தலைநகரங்களிலும் முதல் கட்டமாக அரசு ஊழியர்களும் அதிகாரிகளும் வீட்டிலிருந்தே பணியாற்றும் ஏற்பாட்டைச் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

தகவல் தொழில்நுட்பத்துறை அளவுக்கு கணினி மூலமாக அரசுப் பணிகளை மேற்கொள்ளும் நிலை இன்னும் ஏற்படவில்லை என்ற போதிலும் 50 விழுக்காட்டிற்கும் கூடுதலான அரசுப் பணிகள் கணினி மூலமாகத்தான் இப்பொழுது செய்யப்படுகின்றன. எனவே, அத்தகைய முக்கியமான பணிகளை மட்டும் வீட்டிலிருந்தே கணினி மூலம் செய்வதற்கு அலுவலர்களையும் ஊழியர்களையும் அனுமதிக்க வேண்டும்.

அரசு அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆயுள் காப்பீடு செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு ஊழியர்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் மக்கள் நலப் பணிகள் தொய்வின்றி நடைபெறும். எனவே, இதுகுறித்து விரைந்து ஆலோசித்து நல்லதொரு முடிவைத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்”.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x