

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் 153 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து வருவோர் மற்றும் அவர்களுடன் தொடர்பு வைத்திருப்போர் என தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது.
குறிப்பாக கடந்த 5 நாட்களில் மட்டுமே 153 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 17-ம் தேதி ஒரே நாளில் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து 18-ம் தேதி 27 பேருக்கும், 19-ம் தேதி 28 பேருக்கும், 20-ம் தேதி 46 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் மாவட்டத்தில் நேற்று வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 575 ஆக இருந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் இன்று 40 பேருக்கு மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் 2 பேர் மட்டுமே பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 577 ஆக அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி நகரில் டூவிபுரம், அண்ணாநகர், மில்லர்புரம், ராஜபாண்டிநகர், பூபாலராயர்புரம் உள்ளிட்ட பல இடங்களில் கரோனா தொற்று உள்ளது. அதேபோல் மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆத்தூர், செய்துங்கநல்லூர் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் கரோனா தொற்று பரவியுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
அதேநேரத்தில் மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று வரை 425 பேர் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மேலும் 19 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 444 ஆக அதிகரித்துள்ளது.