

தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் ஆயிரம் கிராமங்களில் உள்ள தனியார் நிலங்களில் ரூ.115.31 கோடியில் 1.02 மரக்கன்றுகள் நடப்படும் என வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது:
தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் 5 வது ஆண்டு பணிகளாக தமிழகத்தில் 1000 கிராமங்களில், ரூ.115.31 கோடி மதிப்பில் 1.02 கோடி மரக்கன்றுகள் தனியார் நிலங்களில் நடவு செய்யப்படும். தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு இயக்கத்தை பலப்படுத்தும் வகையில் 25 குழுக்கள் அமைக்கவும், 5 புராதன இடங்களை அறிவிக்கவும் ரூ.75 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தை மேம்படுத்த 5 ஆண்டுகளில் திரும்ப செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் வட்டியில்லாக் கடனாக ரூ.30 கோடி வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி, ஈரோடு, நெல்லை ஆகிய இடங்களில் ரூ.3.90 கோடியில் வன கால்நடை மருத்துவ மையங் கள் அமைக்கப்படும். பணி மூப்பு பட்டியலில் இடம் பெற்று, வனக் காவலருக்குரிய உடல் தகுதி யில்லாத தோட்டக்காவலர் மற்றும் சமூக வனப்பணியாளர்கள், வன ஓய்வு விடுதிகளில் விடுதிக் காவலர்கள், சமையலர்களாக பணியமர்த்தப்படுவர்.
இதற்காக 206 புதிய பணியிடங்கள் ஏற்படுத் தப்படுகிறது. தமிழ்நாடு வனத் தோட்டக் கழகத்தின் வருவாயை பெருக்கும் நோக்கில், ரூ.17.79 கோடியில் 5,450 ஹெக்டேர் பரப்பில் தைலம் மற்றும் முந்திரித் தோட்டங்கள் அமைக்கப்படும். ஜெயங்கொண்டத்தில் முந்திரி பதப்படுத்தும் பிரிவு ரூ.14 லட்சத்தில் அமைக்கப்படும். வால்பாறையில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில், பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும் வகையில், யானைகள் நடமாட்டம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் வசதி ஏற்படுத்தப்படும் என்றார்.