

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் நெருப்பு மூலம் பொருட்கள் தயாரிக்கும் 13 அடி நீள தொழிற்கூட அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப்.19-ம் தேதி 6-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது. கரோனா ஊராடங்கால் நிறுத்தப்பட்ட அகழாய்வு பணி மீண்டும் மே 20-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இதில் மணலூரில் சுடுமண்ணாலான உலை, கீழடியில் விலங்கின எலும்பு, தண்ணீர் செல்வதற்கான வடிகால் அமைப்பு, கொந்தகையில் முதுமக்கள்தாழியில் மனித எலும்பு, 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய குழந்தையின் முழு உருவ எலும்புக்கூடு, அகரத்தில் மண் பானைகள், 17-ம் நூற்றாண்டு தங்க நாணயம் என பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில் 13 அடி நீள தொழிற்கூட அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதனருகே நெருப்பு மூலம் இரும்பு, கண்ணாடி போன்றவற்றை பயன்படுத்தி பொருட்கள் தயாரித்ததற்கு அடையாளமாக கருப்பு நிற சாம்பல் துகள்கள் கிடைத்தன.
கீழடி அக்காலத்தில் தொழில் நகரமாக இருந்ததற்கான ஆதாரங்கள் தொடர்ந்து கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.