

கோவை மாவட்டத்தில் கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு கரோனா கால சிறப்பு நிதியாக ரூ.5.16 கோடி வழங்கப்படும் என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் சுயதொழில் புரியும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், 22 பேருக்கு ரூ.24.28 லட்சம் நிதியுதவியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத், மாவட்ட வருவாய் அலுவலர் ராம.துரைமுருகன், மகளிர் திட்ட இயக்குநர் கு.செல்வராசு மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, “காரமடை, பெரியநாயக்கன்பாளையம், அன்னூர், சர்க்கார் சாமகுளம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 54 கிராம ஊராட்சிகளில் தொழில்களை மேம்படுத்த உலக வங்கி நிதியுதவியுடன், ஊரக புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் கரோனா சிறப்பு நிதியுதவிக்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 5,047 பயனாளிகளுக்கு ரூ.5.16 கோடி நிதி வழங்கப்பட உள்ளது” என்றார்.